×

திருச்சி அணிக்கு எதிராக திண்டுக்கல் அபார வெற்றி

கோவை: பால்சி திருச்சி அணியுடனான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி முதலில் பேட் செய்தது. கேப்டன் கங்கா ஸ்ரீதர், ஜாபர் ஜமால் இணைந்து திருச்சி இன்னிங்சை தொடங்கினர். ஜமால் 4 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த அக்‌ஷய் ஸ்ரீனிவாசன் டக் அவுட்டானார். ஒரு முனையில் கங்கா ஸ்ரீதர் உறுதியுடன் போராட, சக வீரர்கள் சொற்ப ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுப்பு நடத்தினர்.

இதனால் திருச்சி அணி 10.2 ஓவரில் 49 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், கங்கா ஸ்ரீதர் – ராஜ்குமார் ஜோடி 7வது விக்கெட்டுக்கு அதிரடியாக 65 ரன் சேர்த்தது. கங்கா ஸ்ரீதர் 48 ரன் (41 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ராஜ்குமார் 39 ரன் (22 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். ராமதாஸ் 4, சிலம்பரசன் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப, திருச்சி அணி 19.1 ஓவரில் 120 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டிராகன்ஸ் பந்துவீச்சில் வருண் 3, சரவண குமார், சுபோத், அஷ்வின் தலா 2, எஸ்.அருண் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் 14.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஷிவம் சிங் 46 ரன் (30 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), பாபா இந்தர்ஜித் 22 ரன், ஆதித்யா கணேஷ் ஆட்டமிழக்காமல் 20 ரன் எடுத்தனர். திருச்சி பந்துவீச்சில் நடராஜன், ராமதாஸ், ராமதாஸ் அலெக்சாண்டர், ஆண்டனி தாஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

The post திருச்சி அணிக்கு எதிராக திண்டுக்கல் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Trichy ,Coimbatore ,TNPL league ,Balsi ,Dindigul Dragons ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் மாநில மகளிர் கபடி போட்டி