×

செந்தில் பாலாஜி கைது; கார்கே, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்: அமலாக்கத்துறை பெயரை பாஜவின் ஆர்மி என மாற்ற யோசனை

புதுடெல்லி: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு மல்லிகார்ஜுன கார்கே, கெஜ்ரிவால் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறையின் பெயரை பாஜவின் ஆர்மி என மாற்ற யோசனை தெரிவித்தனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது. இது மோடி அரசை எதிர்ப்பவர்களுக்கு எதிரான அரசியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளால் எதிர்க்கட்சியில் இருக்கும் யாரும் பயப்பட மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் : சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு பாஜவின் ஆர்மி என பெயரை மாற்ற வேண்டும். தமிழ்நாடு அமைச்சருக்கு எதிரான சோதனை மற்றும் கைது நடவடிக்கையை கண்டிக்கிறோம். அவர் கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபனைக்குரியது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஊழல்வாதிகளின் பின்னால் செல்லாது. அனைத்து ஊழல்வாதிகளும் பாஜவில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் ராஜா : தலைமை செயலகத்திற்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தியது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இவ்வாறு செய்வதன் மூலமாக தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுவிடலாம் என்று பாஜ நினைத்தால் அவர்கள் உண்மையில் இது எவ்வளவு மோசமானது என்பதை நீங்கள் அறியவில்லை என்று அர்த்தம். தமிழ்நாடு பாஜவை அனுமதிக்காது. தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா: எந்த மாநிலத்தில் இது நடக்கவில்லை. எந்த அரசியல் கட்சி இதுபோன்ற நடவடிக்கையை எதிர்கொள்ளவில்லை. இது அரசியலுக்கு நாம் கொடுக்கும் சிறிய விலையாகிவிட்டது. ஒன்றிய அரசும், இந்த அமைப்புக்களும் தங்களது நடத்தை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

உத்தவ் ஆதரவு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்: ஒன்றிய பாஜ அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் மீதுதான் அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய ஏஜென்சிகள் வழக்குப்போடுகின்றன. நவாப் மாலிக், மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், அணில் தேஷ்முக் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

The post செந்தில் பாலாஜி கைது; கார்கே, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்: அமலாக்கத்துறை பெயரை பாஜவின் ஆர்மி என மாற்ற யோசனை appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Kharke ,Kejriwal ,Enforcement Department ,Bajwa's Army ,New Delhi ,Mallikarjuna Kharge ,Tamil ,Nadu ,Minister ,Enforcement Department's… ,BJP Army ,Dinakaran ,
× RELATED வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்...