×

2 ஆண்டுகளாக திறக்கப்படாமலிருக்கும் ஆரம்ப துணை சுகாதார நிலையம்: செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

ஊத்துக்கோட்டை; கோடுவெளி கிராமத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த கோடுவெளி கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதை சுற்றி காரணி, இந்திராநகர் என 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச்சேர்ந்த கர்பிணிகள் வார, மாத பரிசோதனைகள், கர்பிணிகள் பதிவு, டாக்டர் முத்து லட்சுமிரெட்டி மகப்பேறு நினைவு நிதி கொடுப்பது ஆகியவற்றிக்காக குருவாயல் பகுதிக்கு செல்கின்றனர்.

அதனால் இந்த கிராமத்திற்கு துணை சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்தனர். அதன்படி கடந்த 2020-21ம் ஆண்டு ரூ.27 லட்சம் செலவில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இது கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த புதிய கட்டிடத்தை திறக்கவேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். கோடுவெளி ஒன்றிய கவுன்சிலர் குழந்தைவேல், பெரியபாளையம், எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் இதுவரை 3 முறை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கோடுவெளி கிராமத்தில் உள்ள மக்களுக்கு நோய்கள் வந்தால் குருவாயல் கிராமத்தில் உள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. அல்லது தனியார் மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவ செலவு அதிகமாகிறது. எனவே கோடுவெளியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post 2 ஆண்டுகளாக திறக்கப்படாமலிருக்கும் ஆரம்ப துணை சுகாதார நிலையம்: செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Primary sub-health center ,Uthukottai ,Primary Secondary Health Center ,Koduveli village ,Periyapalayam… ,Primary Auxiliary Health Center ,Dinakaran ,
× RELATED ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில்...