×

மாடம்பாக்கம் ஊராட்சியில் ரூ.82.27 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை பணி: பூமிபூஜை செய்து எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கூடுவாஞ்சேரி: மாடம்பாக்கம் ஊராட்சியில் ரூ.82.27 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில், மாடம்பாக்கம், குத்தனூர், தாய் மூகாம்பிகை நகர், வள்ளலார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மாடம்பாக்கத்தில் இருந்து வள்ளலார் நகர் வழியாக தைலாவரம் வரை செல்லும் 2 கிலோ மீட்டர் கொண்ட பிரதான சாலை கடந்த 10 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சியளித்து வந்தது. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள், ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டனர். இதனையடுத்து, மேற்படி சாலையை சீரமைக்க வலியுறுத்தி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, கலெக்டர் கலைச்செல்வி மோகன், மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன், ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரன் ஆகியோரிடம் மாடம்பாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் தீபக் (பொறுப்பு) மனு கொடுத்து, இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார்.

அதன்பேரில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.82.27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, மாடம்பாக்கம் ஊராட்சியில் புதிய தார்சாலை அமைக்க பூமிபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில், ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரன் தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜலட்சுமிராஜி, மாடம்பாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் தீபக் (பொறுப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு, மாடம்பாக்கத்தில் இருந்து கொருக்கந்தாங்கல் செல்லும் 2 கிலோ மீட்டர் கொண்ட பிரதான சாலையை, ரூ..82.27 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் அமுதாசெல்வம், ஊராட்சி செயலர் மொய்தின், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாடம்பாக்கம் ஊராட்சியில் ரூ.82.27 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை பணி: பூமிபூஜை செய்து எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Madambakkam panchayat ,MLA ,Guduvanchery ,Selvaperunthakai ,
× RELATED நந்திவரம் – கூடுவாஞ்சேரி...