கூடுவாஞ்சேரி: ஆதனூர் ஊராட்சியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக ஒதுக்கிய ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்து விற்க முயற்சி செய்வதாக ரவுடி கும்பல் மீது பொதுமக்கள் புகார் கூறியதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில், ஆதனூர், டிடிசி நகர், பலராமபுரம், லட்சுமிபுரம், கண்ணதாசன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆதனூர் ஊராட்சியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக ஒதுக்கிய ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்து விற்க முயற்சி செய்வதாகவும், இதுகுறித்து ரவுடி கும்பல் மீது பொதுமக்கள் புகார் கூறியதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதன், மாவட்ட கலெக்டர் மற்றும் மணிமங்கலம் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், ‘ஆதனூர் ஊராட்சியில், மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம் மூலம் தொழில் நுட்ப அனுமதி அளிக்கப்பட்டு உள்ளாட்சி துறையால் மனை பிரிவுகளுக்கு இறுதி ஒப்புதல் வழங்கும்போது ஊராட்சிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ள திறந்தவெளியிடம் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் சொத்து பதிவேடு எண் 16ல் ஊராட்சிக்கு சொந்தமான இடங்கள் குறித்த பக்கத்தில் பதிந்து பராமரிக்கவும், மேலும் மேற்படி தானமாக பெறப்பட்ட திறந்தவெளி இடம் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் பெயரில் பட்டா மாற்றம் செய்து பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் நில வரைபடம் பெற்று ஊராட்சியில் பராமரிக்குமாறு தமிழக அரசின் வருவாய் துறை சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவின்பேரில், ஆதனூர் ஊராட்சி நிர்வாகம் ஊராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திறந்தவெளி இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களுக்கு பட்டா பெறவும், முள்வேலி அமைத்து பராமரிக்கவும் களஆய்வு செய்தது. அப்போது, ஊராட்சிக்கு தானமாக வழங்கப்பட்ட இடங்களில் 70 சதவீத இடங்களில் சொகுசு பங்களாவாகவும் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், ஒரு சிலர் இந்த பூங்கா பகுதிகளுக்கு போலியான பத்திரங்களை தயார் செய்து அதனை பத்திர பதிவும் செய்து மோசடியாக பட்டாக்களையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறு பெற்ற பட்டாவை கொண்டு பல கோடி ரூபாய் மதிப்பிற்கு கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளனர். இதுகுறித்து மேற்குறிப்பிட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக பலமுறை எச்சரிக்கை அறிவிப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை மேற்கண்ட ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. எனவே, ஆதனூர் ஊராட்சியில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பூங்காக்களை மீட்டு ஊராட்சி வாசம் ஒப்படைக்க வேண்டுமென்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
* மோசடி கும்பலுக்கு பட்டா வழங்கிய அதிகாரிகள்
ஆதனூர் ஊராட்சியில் டிடிசிபி அப்ரூவல் பிளாட்டுகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட திறந்தவெளி இடங்களை குறிவைத்து மோசடி கும்பல் ஒன்று போலி பத்திரங்கள் தயார் செய்து வருவாய்த்துறை மூலம் பட்டா வாங்கி பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் இதற்கு வருவாய்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் மணிமங்கலம் போலீசார் மோசடி கும்பல் குறித்து லிஸ்ட் எடுக்க தொடங்கியுள்ளனர். மேலும், இதில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், இதற்கு முக்கிய புள்ளி யார் என்பது குறித்தும், சம்பந்தப்பட்ட ஓஎஸ்ஆர் இடங்களுக்கு நேரில் சென்று நேற்று முதல் போலீசார் பொதுமக்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆதனூர் ஊராட்சியில் பள்ளிக்கு ஒதுக்கிய ரூ.10 கோடி நிலத்தை ஆக்கிரமித்து விற்க முயற்சி: ரவுடி கும்பல் மீது பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.