×

ஜி20 நாடுகளின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்கும் டபிள்யு-20 பெண்கள் உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் இன்று துவங்குகிறது: 158 வெளிநாட்டு பெண் பிரதிநிதிகள் பங்கேற்பு

சென்னை: ஜி20 நாடுகளின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்கும் டபிள்யு20 பெண்கள் உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் இன்று துவங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து 158 பெண் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 2023ல் ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. அதையொட்டி, ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்கும், பல்வேறு துறைகளின் பணிக்குழு கூட்டங்கள், இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் நடந்து வருகிறது. கல்வி மற்றும் நிதி பணிக்குழு கூட்டங்கள் சென்னையில் நடந்தது. அதை தொடர்ந்து, டபிள்யு 20 பெண்கள் உச்சி மாநாடு மாமல்லபுரம் தனியார் கடற்கரை விடுதியில் இன்றும், நாளையும் நடக்கிறது.

இரண்டு நாட்கள் நடக்கும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ள கருத்துகள் குறித்து மாநாட்டின் தலைவர் சந்தியா புரேச்சா, தலைமை ஒருங்கிணைப்பாளர் தாரித்ரி பட்நாயக் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, மாற்றம், செழிப்பு மற்றும் முன்னேற்றம்’ என்பதை மையமாக கொண்டு, டபிள்யு20 பெண்கள் உச்சி மாநாடு நடக்கிறது. பெண் சாதனையாளர்களின் திறமையை வெளிப்படுத்தும் கண்காட்சி, பல்வேறு தலைப்புகளில் எட்டு அமர்வுகள் நடக்கவுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 158 பெண் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது பற்றி, அடித்தட்டு மக்களிடம் கருத்துகள் பெறப்பட்டுள்ளது. பொருளாதார சுதந்திரம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடு ஆகிய ஐந்து அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மாநாட்டில் விவாதங்கள் நடத்தப்படும்.

இதற்கு முன்பு ஜெய்ப்பூர் அவுரங்காபாத் ஆகிய இடங்களில் ஜி20 பெண் பணி குழு கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த உச்சி மாநாட்டில், அறிக்கை வெளியிடப்படும். பெண்கள், வங்கி கடன் பெறுவது உள்ளிட்டவற்றில் பல்வேறு தடைகளை எதிர்கொள்கின்றனர் அது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். பின்னர் நடைபெற்ற பொதுமக்களின் பங்களிப்பு (ஜன்பகிதாரி) நிகழ்ச்சியில் பல்வேறு பெண் தொழில்முனைவோர், சுய உதவிக்குழுகளை சேர்ந்த பல மாநிலங்களை சேர்ந்த பெண்கள் தங்களின் வாழ்க்கைத்தரம் எப்படி உயர்ந்துள்ளது என்பது குறித்து பேசினர். இதில் தமிழகத்தை சேர்ந்த ராஜம் மற்றும் இருளர் இனப்பெண் செல்வி என 2 பெண்கள் பங்கேற்று பேசினர்.

The post ஜி20 நாடுகளின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்கும் டபிள்யு-20 பெண்கள் உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் இன்று துவங்குகிறது: 158 வெளிநாட்டு பெண் பிரதிநிதிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : W-20 Women's Summit ,Mamallapuram ,G20 ,CHENNAI ,W20 Women's Summit ,women ,Dinakaran ,
× RELATED மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு