×

திற்பரப்பு அருவியில் வெள்ளம் அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா ஸ்தலம் திற்பரப்பு அருவி. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் கோதையாறு அருவியாக விழுகிறது. இதனால் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் எல்லா நாட்களிலும் பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த 2 மாதங்கள் கோடை விடுமுறை சீசன் என்பதால் சுற்றுலா களைகட்டியது. அதோடு மழை இல்லாமல் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தால் நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து காணப்பட்டது. திற்பரப்பில் அருவியாக விழும் கோதையாறும் தண்ணீரின்றி சிறு ஓடை போல் காட்சியளித்தது.

கோதையாற்றின் நீர் பரப்பு பகுதி கட்டாந்தரையாகவும் பாறைகளாகவும் காட்சியளித்தது. இதனால் அருவியில் விழும் தண்ணீர் அளவு தினசரி குறைந்த நிலையில் இருந்தது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தண்ணீர் விழுந்தது. இதனால் கோடை சீசனில் குளிக்கும் பகுதியில் கடும் நெரிசல் இருந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் தண்ணீர் மிகவும் குறைந்து லேசாக தண்ணீர் வடிந்த நிலையில் பெரும் பகுதியும் பாறையாக காட்சியளித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலையோர பகுதிகளில் பெய்த மழை நேற்று காலை வரை சாரல் மழையாக தொடர்ந்தது. இதனால் கோதையாற்றில் தண்ணீர் வருகை அதிகரித்து காணப்பட்டது.

ஆகவே திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகரித்து பரந்து விரிந்து கொட்டுகிறது. நேற்று காலை வரை சாரல் மழை பெய்தது. அதன் பின்னர் வெயில் மங்கிய நிலையில் வானம் மேகமூட்டமாக இருந்தது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் பயணிகள் கூட்டம் மிதமாக இருந்தது. குளிர்ச்சியான தண்ணீர் இதமான காலநிலை பயணிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் கோதையாற்றின் குறுக்கே அமைந்துள்ள திற்பரப்பு தடுப்பணையில் நடைபெறும் உல்லாச படகு சவாரியிலும் பயணிகள் ஆர்வமுடன் படகுகளில் சென்று இயற்கையை ரசித்தனர்.

The post திற்பரப்பு அருவியில் வெள்ளம் அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Kulasekaram ,Kannyakumari ,Gothayarai ,Western Ghendra mountain ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளிக்க தடை...