×

கடை வரம்பு வரை தண்ணீர் கிடைக்குமா? குமரியில் நெல் சாகுபடியை தொடங்க விவசாயிகள் தயக்கம்: கால்வாய்களை முறையாக தூர்வார கோரிக்கை

நாகர்கோவில்: குமரியில் தற்போது கன்னிப்பூ சாகுபடி நடந்து வருகிறது. சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி பணி தொடங்கி உள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் இல்லாததால், சாகுபடி பணிகள் செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டும் நிலை உள்ளது. குளத்து பாசன பகுதிகளான பறக்கை, பால்குளம், தேரூர், சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே சாகுபடி பணி தொடங்கி விட்டது. தற்போது 2வது உரம் போடும் அளவிற்கு நெற் பயிர்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த பயிர்கள் வரும் ஆடி மாதம் அறுவடைக்கு தயராகி விடும்.

ஆனால் ஆற்று பாசன பகுதிகள் அணை திறப்பை எதிர் நோக்கி, கடந்த மாதம் மத்தியில் நாற்றங்கால் தயாரிக்கும் பணியை விவசாயிகள் மேற்கொண்டனர். மாவட்ட நிர்வாகம் அறிவித்தது போல் கடந்த ஜூன் 1ம் தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. அணை திறப்பதற்கு முன் ஏப்ரல் மாதம் முதல் சானல்களில் தூர்வாரும் பணிகள் நடக்கும். இந்த வருடம் அரசு பணம் ஒதுக்கியும் நீர்வளத்துறை அதிகாரிகள் பணியை மேற்கொள்ள வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாசன கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் சானல்களில் உள்ள உடைப்புகள் வழியாக வீணாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கடை வரம்பு வரை தண்ணீர் என்பது கேள்வி குறியாகி உள்ளது. அணையில் தண்ணீர் திறந்தவுடன், 4வது நாள் கடைவரம்பு பகுதிக்கு தண்ணீர் சென்று சேரும். ஆனால் தற்போது அணை திறந்து 12 நாட்கள் ஆனபிறகும் கடைவரம்பு பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் கடைவரம்பு பகுதியில் உள்ள வயல்களில் சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டுகிறார்கள். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால் குமரி மாவட்டத்தில் சானல்கள் மற்றும் குளங்களில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்புகளை சரி செய்ய ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்து 339 பணிகள் நடந்தன. ஆனால் தற்போது இதில் சுமார் 60 பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாக விவசாயிகள் கூறி உள்ளனர்.

எடுத்துக்காட்டாக நாவல்காடு அருகே உள்ள நாடான் குளம் உடைப்பு இன்னும் சரி செய்யாததால் நாவல்காடு, இறச்சகுளம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் நிலத்தில் இந்த வருடம் நெல் சாகுபடியை விவசாயிகள் கைவிட்டுள்ளனர். இது போல் தோவாளை சானலில் ஆதிச்சன்புதூர் மடை உடைந்துள்ளது. இந்த உடைப்பை சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த உடைப்பு சரிசெய்யாததால் அந்த பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் சாகுபடி பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது போல் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரிய குளத்தை நம்பி சுமார் ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி நடந்து வருகிறது. கடந்த வருடம் வள்ளியாற்றில் இருந்து பெரியகுளத்திற்கு வரும் தடுப்பணை சீரமைக்கும் பணி நடந்ததால் கும்பபூ சாகுபடி நடக்கவில்லை.

தற்போது கன்னிப்பூ பணிக்கு விவசாயிகள் ஆயத்தம் ஆகியுள்ளனர். ஆனால் வள்ளியாற்றில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் பெரியகுளத்திற்கு தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளது. பெரிய குளத்திற்கு தண்ணீர் வந்தபிறகு சாகுபடி செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதுபோல் வேம்பனூர் குளத்தை நம்பியுள்ள வயல்பரப்புகள் தற்போது சாகுபடி பணி நடந்து வருகிறது. வெள்ளிமலை அருகே உள்ள கல்படி ஏலாவில், குன்னத்தங்குளத்தில் உள்ள நீரை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வருடங்களாக அந்த பகுதியில் வாழை சாகுபடி நடந்து வந்தது. தற்போது வாழையில் இருந்து நெல்சாகுபடிக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.

கடந்த கும்பபூ சாகுபடியின்போது சுமார் 100 ஏக்கரில் நெல் பயிரிட்டனர். தற்போது வள்ளியாற்றில் இருந்து குன்னத்தங்குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. தண்ணீர் வந்தவுடன் கல்படி ஏலாவில் கன்னிப்பூ சாகுபடி பணியை விவசாயிகள் மேற்கொள்வார்கள். மாவட்டத்தில் உள்ள ஆற்றுபாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் தண்ணீர் சீராக கிடைக்குமா? என்ற கேள்வியுடன், நாற்றங்கால் தயாரித்த விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொள்வதில் பல இடங்களில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கன்னிப்பூ சாகுபடி தொடங்குவதற்கு முன் சானல்கள் பராமரிக்கப்பட்டு புதர்கள், தேவையில்லா மண்கள் அகற்றப்படும். ஆனால் இந்த வருடம் சானல்கள் தூர்வாராமல் அணை திறக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யாத இடங்களில் அணை திறந்தவுடன் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. ஆனால் தண்ணீர் குறைந்த அளவு வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வருண பகவானின் கருணை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டி வருகிறார்கள். பாசனத்துக்கு கடைவரம்பு வரை தண்ணீர் திறக்கப்படும். எனவே விவசாயிகள் கலக்கம் அடைய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையி்ல, மாவட்டத்தில் கடந்த 2021ம் வருடம் மழையால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

சானல்களில் ஓரிரு நாட்களில் தூர்வாரும் பணி தொடங்கும். வருடம் தோறும் இந்த நாட்களில் பருவமழை கைகொடுக்கும். ஆனால் இந்த வருடம் பருவமழை பெய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தூர்வாரப்பட்டு சானல்களில் தண்ணீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post கடை வரம்பு வரை தண்ணீர் கிடைக்குமா? குமரியில் நெல் சாகுபடியை தொடங்க விவசாயிகள் தயக்கம்: கால்வாய்களை முறையாக தூர்வார கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagargo ,Kumarie ,Dinakaran ,
× RELATED குமரியில் மேலும் ஒரு ரவுடி குண்டர் சட்டத்தில் கைது