×

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு..!

சென்னை: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 28ம் தேதி வரை நீதிமன்றத் காவலில் வைக்க உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிபதி அனுமதி அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி உடனடியாக மனு தாக்கல் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜி தரப்பு வாதம்;
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை முதன்மை நீதிபதி அல்லி அமர்வில் விசாரணைக்கு வந்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீதும் விசாரணை நடைபெறுகிறது. அப்போது; செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; நள்ளிரவில் கைது செய்தது சட்டவிரோதமானது. மனைவி, உறவினரிடம் சட்டப்படி கைது குறித்து தெரியப்படுத்தியிருக்க வேண்டும். நள்ளிரவில் கைது செய்தது உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் சட்ட விரோதமானது என அமலாக்கத்துறை அத்துமீறல் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி வாதிட்டார்.

செந்தில் பாலாஜி கைது செய்ததை நிராகரிக்க வேண்டும். செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 அடைப்புகள் உள்ளன; பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணையின் போது துன்புறுத்தப்பட்டார். அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. சிகிச்சைக்காக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் ஐஎஸ்ஐ மருத்துவர்களை வைத்தும் அமலாக்கத்துறை பரிசோதனை செய்தது என செந்தில் பாலாஜியின் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்து வாதிட்டார்.

அமலாக்கத்துறை தரப்பு வாதம்;
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேஷ்; எதற்காக கைது செய்கிறோம் என்ற காரணத்தை தெரிவித்தோம்; சம்மன் அளித்தோம். விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது. கைதுக்கு முன் தொலைபேசி மூலம் அவரையும், அவரது மனைவியையும் தொடர்பு கொண்டோம். இருவரும் தொலைபேசியை எடுக்கவில்லை, இ-மெயில் அனுப்பியும் பதிலில்லை.

நாங்கள் அனுப்பிய சம்மனை செந்தில் பாலாஜி பெற மறுத்தார். கைது குறிப்பாணையை பெற செந்தில் பாலாஜி மறுத்தார். நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை நிராகரிக்கக் கோர முடியாது. கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் நோட்டீஸ் தர வேண்டும் என்ற குற்றவியல் நடைமுறை சட்டம் பொருந்தாது. ரிமாண்ட் செய்யப்பட்டு விட்டதால் ஜாமீன் தான் கேட்க முடியும் என வாதிட்டார்.

செந்தில் பாலாஜி தரப்பு வாதம்;
தொடர்ந்து வாதிட்ட திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ; திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. செந்தில் பாலாஜியின் வீடு மட்டுமின்றி தலைமைச் செயலகத்திலும் சோதனை நடத்தியுள்ளது. 2013 வழக்கில் தொடர்புடைய துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது தலைமைச் செயலகத்தில் வேறு அறையில் இருந்தார். தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்திருப்பது வேறு ஒரு அறையில் என்று வாதிட்டார்.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி கைது செய்யப்படுவதற்கு முன் உரிய நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும். செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. செந்தில் பாலாஜி மீது புகார் கூறப்பட்டு 7 ஆண்டுகள் கழித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு தேர்தல் வருவதனாலேயே தற்போது செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யும் வரை இடைக்கால ஜாமீன் தர வேண்டும் என வாதிட்டார்.

அமலாக்கத்துறை தரப்பு வாதம்;
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. செந்தில் பாலாஜி க்கு இடைக்கால வழங்க சட்டத்தில் இடமில்லை. செந்தில் பாலாஜிக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்து வழங்கப்படும். செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவக் குழுவை நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.

ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு;
செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி நாளைக்கு ஒத்திவைத்தார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு..! appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Minister ,Senthil Balaji ,Chennai ,Chennai Primary Session Court ,Enforcement ,Dinakaran ,
× RELATED ஜாமீன் நீடிப்பு கெஜ்ரிவால் மனு மீது நாளை விசாரணை