×

செந்தில் பாலாஜி கைது என்பது ஜனநாயக படுகொலை; பாஜக அச்சுறுத்தல்களுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்..!!

சென்னை: செந்தில் பாலாஜி கைது என்பது ஜனநாயக படுகொலை; பாஜக அச்சுறுத்தல்களுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜியை 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

செந்தில் பாலாஜி கைது என்பது ஜனநாயக படுகொலை:

செந்தில் பாலாஜி கைது என்பது ஜனநாயக படுகொலை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திமுக ஊழல் கட்சி என்ற போலி கருத்தை நிரூபிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. செந்தில் பாலாஜி கைது மூலம் திமுக-வை களங்கப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் ஒரேஇடத்தில் அமரவைக்கப்பட்டு செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டுள்ளார் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பாஜகவின் கிளை அமைப்பு போல் அமலாக்கத்துறை செயல்படுகிறது:

பாஜகவின் கிளை அமைப்பு போலவே அமலாக்கத்துறை செயல்படுகிறது. செந்தில் பாலாஜியை 18 மணி நேரத்துக்கும் மேல் அடைத்து வைத்து டார்ச்சர் செய்துள்ளனர். அமலாக்கத்துறையினர் தங்களின் எஜமானர்களான மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை திருப்திப்படுத்தியுள்ளனர் என்று கூறினார்.

செந்தில் பாலாஜி கைதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை:

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்தவிதமான விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. திமுக மீதும், திமுக தலைவர்கள் மீது எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியாமல் பாஜக திண்டாடுகிறது.

விசாரணை அமைப்புகளை பயன்படுத்தும் பாஜக:

திமுக மட்டுமின்றி அதிமுகவையும் மிரட்ட விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது. கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என்று கூறியதால் உங்களையும் கைது செய்வோம் என்று அதிமுகவினரையும் பாஜக மிரட்டியிருக்கிறது. செந்தில் பாலாஜி உடல்நிலை பாதிக்கும் வகையில் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் பதற்றத்தில் பாஜக:

பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டு வருவதால் பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது. ஜூன் 23-ல் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பாஜக பதற்றத்தில் உள்ளது. எதிர்க்கட்சிகள் மீது களங்கம் ஏற்படுத்துவது மட்டுமே பாஜகவின் குறிக்கோள். டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்தது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அதிமுக-பாஜகவின் கொங்குநாட்டு கனவு கலைப்பு:

அதிமுக, பாஜகவின் கொங்குநாட்டு கனவை கலைத்தவர் செந்தில் பாலாஜி என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றதற்கு செந்தில் பாலாஜியே காரணம். சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகிய மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியது. 100-க்கும் மேற்பட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை, சிபிஐ மத்திய அரசின் கைப்பாவை:

அமலாக்கத் துறையும் சிபிஐயும் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் புலனாய்வு அமைப்புகள் மூலம் பாஜக பழிவாங்குகிறது. பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபடுவதாக 14 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

பழி வாங்கும் வேட்கையில் பாஜக:

செந்தில் பாலாஜியை பழிவாங்கும் வேட்கை பாஜகவுக்கு அதிகரித்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2024 தேர்தலில் செந்தில் பாலாஜி பணியாற்றினால் பாஜக நோட்டாவுக்கு கீழ் சென்றுவிடும் என பயப்படுகிறது. நோட்டாவை விட நிலைமை மோசமாகி விடும் என்ற பயத்தில் பாஜக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தேச நலனுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளை சுயநலனுக்காக பாஜக பயன்படுத்துகிறது. 3,000 சோதனைகள் நடத்தப்பட்டதில் 1,000 வழக்குகளில் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.

அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம்:

ஊழல் இல்லாத இந்தியா என்பது வெற்று முழக்கம் என்பதை பாஜக நிரூபித்துள்ளது. பாஜக அச்சுறுத்தல்களுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாபல் கூடுதல் வேகத்துடன் செயல்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பழிவாங்கும் நோக்கில் சுற்றித் திரியும் அண்ணாமலை:

சட்டப்பேரவை தேர்தலில் தான் தோற்றதற்கு செந்தில் பாலாஜி காரணம் என்று நினைத்து அவரை பழிவாங்கும் நோக்கில் அண்ணாமலை சுற்றித் திரிகிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். அண்ணாமலையின் அரசியல் தில்லுமுல்லுகளை செந்தில் பாலாஜி விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

செந்தில் பாலாஜி கைதுக்கு எதிராக 3 மனுக்கள் தாக்கல்:

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையை நிராகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்குமாறும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜியை உடனடியாக ஜாமினில் விடுவிக்கக் கோரியும் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாஜகவின் தோல்விகளை மறைக்க கைது நடவடிக்கை:

ஒன்றிய பாஜக ஆட்சியின் தோல்விகளை மறைக்க நடத்தும் நாடகம்தான் கைது நடவடிக்கை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகள் மீது வழக்கு போட்டு, அவர்களின் செயல்பாடுகளை முடக்க பாஜக நினைக்கிறது. ஒன்றிய அரசின் அச்சுறுத்தலுக்கு எதிர்க்கட்சிகள் அடிபணியாது; இன்னும் கூடுதல் வேகத்துடன் செயல்படுவோம். அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் 95% பேர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஒன்றிய அரசு, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பாரபட்சமாக பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

செந்தில் பாலாஜி பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை:

செந்தில் பாலாஜி பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தியதை தமிழகத்திற்கு தலைகுனிவு என கண்டித்தவர் ஸ்டாலின். செந்தில் பாலாஜி கைது தொடர்பாக முன்னுக்குப்பின் முரணாக பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சியின் மீது களங்கம் விளைவிக்க பழனிசாமி, செந்தில்பாலாஜியின் கைதை பயன்படுத்தப் பார்க்கிறார். வேலுமணி, தங்கமணி மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. செந்தில் பாலாஜி பற்றி பேசும் முன் எடப்பாடி பழனிசாமி கண்ணாடியை பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் செயல் கேடு கெட்ட மனநிலையை காட்டுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக கூறினார்.

The post செந்தில் பாலாஜி கைது என்பது ஜனநாயக படுகொலை; பாஜக அச்சுறுத்தல்களுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Democrats ,BJP ,Minister ,Ma. Superamanian Gatham ,Chennai ,Bajaka ,Supremanian ,Ma. Superamanian Gaatam ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட...