×

பிப்பர்ஜாய் புயல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து குஜராத்தின் கடற்கரையோர பகுதிகளில் இருந்து 47,000 பேர் வெளியேற்றம்!

அகமதாபாத்: பிப்பர்ஜாய் புயல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து குஜராத்தின் கடற்கரையோர பகுதிகளில் இருந்து 47,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அரபிக் கடலில் உருவாகி, தீவிரமடைந்து வரும் பிப்பர்ஜாய் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடற்கரையில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் பூபேந்திர படேல் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதுவரை கடற்கரையோர பகுதிகளைச் சேர்ந்த 47,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பில் 18 குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படை சார்பில் 12 குழுக்களும் குஜராத்தின் கடற்கரையோர மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புயல் பாதிப்பு தீவிரமாக இருக்கலாம் என்பதால், எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், கடற்படை ஆகியவையும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இணைந்துள்ளன. புயல் காரணமாக 69 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 27 ரயில்களின் தொலைவு குறைக்கப்பட்டுள்ளது. 33 ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று மேற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட கிழக்கு அரபிக்கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பிப்பர்ஜாய் புயல், மெதுவாக வட மேற்கு திசையில் கரையை நோக்கி நெருங்கி வருகிறது.

காலை 11.30 மணி நிலவரப்படி, மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை நெருங்கி வருகிறது. ஜாக்குவா போர்ட் பகுதியில் இருந்து 280 கிலோ மீட்டர் தொலைவிலும், தேவபூமி துவாராகவில் இருந்து 290 கிலோ மீட்டர் தொலைவிலும், நாலியாவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. இந்தப் புயல் வடகிழக்குத் திசையில் நகர்ந்து சவுராஷ்ட்ராவுக்கும் கட்ச் பகுதிக்கும் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால், மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அதிகபட்சம் மணிக்கு 150 கிலோ மீட்டராக அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக இன்று கட்ச், தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜூனாகர், மோர்பி மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என கூறப்படுகிறது. கட்ச், தேவபூமி துவாரகா, ஜாம்நகர் மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது. இந்த மாவட்டங்களில் நாளையும் மிக கனமழை பெய்யும்” என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post பிப்பர்ஜாய் புயல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து குஜராத்தின் கடற்கரையோர பகுதிகளில் இருந்து 47,000 பேர் வெளியேற்றம்! appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Pipperjoy storm ,Ahmedabad ,Arabic Sea ,Dinakaran ,
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...