×

சதாவரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை: காஞ்சி கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு துறையால் நடத்தப்படும் காஞ்சிபுரம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி ஓரிக்கை அடுத்த சதாவரம் பகுதியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியில் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இதில், 1 முதல் 8ம் வகுப்பு வரை ரூ.1000 முதல் 3000 ரூபாயும், 9 முதல் 10ம் வகுப்பு வரை 4000 ரூபாயும் என ஒரு ஆண்டு கல்வி உதவித் தொகையுடன் மாணவர் சேர்க்கை நடக்கிறது. 3 வயது முதல் 15 வயது வரையுள்ள ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கலாம். மாணவ, மாணவிகள் தங்கி பயிலும் வண்ணம் தனித்தனி விடுதி வசதியுடன் கூடிய பள்ளியாகும். தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களோடு பேச்சு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்த கணினி வழி கற்பித்தல், யோகா, கராத்தே, தியானம், விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

விடுதியில் மூன்று வேளையும் சமச்சீர் உணவு, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழக அரசால் வழங்கப்படும் ஆண்டு கல்வி உதவித்தொகை, இலவச காதொலி கருவி, விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை, காலணிகள் மற்றும் பிற கல்வி உபகரணங்கள், இலவச பேருந்து பயணச்சலுகை என அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன. பள்ளியில் சேர விரும்புவோர் 044-27267322, 9597465717 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். மாணவ, மாணவிகள் வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post சதாவரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை: காஞ்சி கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Satavaram Govt High School ,Kanchi ,Kanchipuram ,Kalaichelvi Mohan ,Tamil Nadu Government ,Department of Rehabilitation for Persons with Disabilities ,
× RELATED மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி