×

திருமணத்திற்கு சென்று திரும்பிய போது படகு கவிழ்ந்ததால் நீரில் மூழ்கி 100 பேர் பலி:நைஜீரியாவில் சோகம்

நைஜீரியா: நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்க நாடான வடக்கு நைஜீரியாவின் எக்போட்டி கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருமண விழாவை முடித்துக் கொண்டு அவர்கள் படகில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்தப் படகில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். எதிர்பாராதவிதமாக அந்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகில் அமர்ந்திருந்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர். தகவலறிந்த மீட்புப் படையினர், ஆற்றின் நீரில் மூழ்கிய மக்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து நைஜீரிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒகாசன்மி அஜய் கூறுகையில், ‘நைஜர் ஆற்றை கடந்து செல்வதற்காக மக்கள் படகில் சென்றனர். அவர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பி உள்ளனர். அதிகாலை 3 மணியளவில் திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்துள்ளது. படகில் இருந்த 100க்கும் மேற்பட்டோரும் மூழ்கியுள்ளனர். அதிகாலை நேரத்தில் விபத்து நடந்ததால், உடனடியாக அவர்களுக்கு உதவ முடியவில்லை.

நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றார். முன்னதாக கடந்த மாதம் வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 15 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கடந்தாண்டு அனம்ப்ரா மாநிலத்தில் வெள்ளத்தால் பெருக்கெடுத்த ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 76 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருமணத்திற்கு சென்று திரும்பிய போது படகு கவிழ்ந்ததால் நீரில் மூழ்கி 100 பேர் பலி:நைஜீரியாவில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Nigeria ,
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்