×

ஆந்திர வனப்பகுதியில் இருந்து தண்ணீருக்கு கிராமத்தில் புகுந்த 8 காட்டுயானைகள்

*பொதுமக்கள் அலறி ஓட்டம்

திருமலை : ஆந்திர மாநிலம், பார்வதிபுரம்மன்யம் மாவட்டத்தில் 8 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அலறி ஓட்டம் பிடித்தனர்.
ஆந்திர மாநிலம், பார்வதிபுரம்மன்யம் மாவட்டத்தில் குருபத்தி அடுத்த பூஜாரிகுடா கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதி அருகே உள்ளதால் அவ்வப்போது காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அங்குள்ள விவசாய விளை நிலங்களை நாசம் செய்து வருகின்றன. இதனை அவ்வப்ேபாது வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை குட்டியுடன் 8 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் திடீரென பூஜாரிகுடா கிராமத்திற்குள் நுழைந்தது. இதனை பார்த்த கிராமமக்கள் பீதியில் தலைத்தெரிக்க ஓடினர். யானைகள் வீட்டின் முன் தேக்கி வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை குடித்து தாகம் தணித்து கொண்டது. மேலும், அருகே உள்ள விவசாய பயிர்களை நாசம் செய்து அட்டகாசம் செய்தது.

இதுகுறித்து கிராமமக்கள் குருபத்தி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகள் திடீரென ஊருக்குக்குள் புகுந்ததால் கிராமமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘யானைகளால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. விளை நிலங்களை முழுவதும் சேதப்படுத்துவதற்குள் வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆந்திர வனப்பகுதியில் இருந்து தண்ணீருக்கு கிராமத்தில் புகுந்த 8 காட்டுயானைகள் appeared first on Dinakaran.

Tags : Andhra forest ,Thirumalai ,Parvathipurammanyam, Andhra State ,AP ,Dinakaran ,
× RELATED 8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில்...