×

பள்ளிக்கு செல்ல பஸ் வசதி கேட்டு திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே குரும்பபட்டி ஊராட்சிட்பட்ட மீனாட்சி நாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் மீனாட்சி நாயக்கன்பட்டி மற்றும் சுற்றியுள்ள சோலைராஜா காலனி, குரும்பபட்டி பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி தரம் உயர்த்தப்படுவதற்கு முன்பு மீனாட்சிநாயக்கன்பட்டி ஊருக்குள் பள்ளி செயல்பட்டது.

தற்போது உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு புதிய பள்ளி கட்டிடம் போக்குவரத்து வசதி இல்லாத திண்டுக்கல் புறவழிச்சாலைக்கும், எம்.வி.எம்.அரசினர் மகளிர் கலை அறிவியல் கல்லூரிக்கும், திண்டுக்கல்- பழநி ரயில் பாதைக்கும் இடையில் கட்டப்பட்டுள்ளது.இந்த புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்ட 2018- 2019ம் ஆண்டு முதல் மாணவ, மாணவிகள் உரிய பாதை வசதியோ, போக்குவரத்து வசதியோ இல்லாத காரணத்தினால் தனியார் மினி பஸ் மூலம் கட்டணம் செலுத்தி பள்ளிக்கு சென்று வந்தனர் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் கட்டுமான, பஞ்சாலை தொழிலாளர்களாகவும், சாலையோர வியாபாரிகளாகவும் என உடல் உழைப்பு தொழிலாளர்களாக உள்ள போதிலும் குழந்தைகளின் போக்குவரத்துக்கு என மாதம் ரூ.1000 வரை செலவு செய்து தனியார் மினி பஸ் மூலம் கட்டணம் செலுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மினி பஸ்கள் இயங்காத நாட்களில் மாணவ, மாணவிகள் புறவழிச்சாலை வழியே வந்து ரயில் பாதை மேம்பாலத்தின் கீழ் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிக்கு செல்கின்றனர்.

இவ்வழியாக வரும் போது போதை பொருட்கள் பயன்படுத்தும் நபர்கள் ஆங்காங்கே இருப்பதும் மட்டுமின்றி மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு இருப்பதும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு தடையாக உள்ளது.இந்நிலையில் மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து பள்ளி சென்று வர காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் அரசு பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று இப்பள்ளி மாணவ, மாணவிகள் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் முகேஷ் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கை மனுவை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அளித்தனர். அவர், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.

The post பள்ளிக்கு செல்ல பஸ் வசதி கேட்டு திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Dindigul District ,Principal Education Officer ,Dindigul ,Meenakshi Nayakkanpatti ,Kurumbapatti Panchayat ,Meenakshi ,Nayakkanpatti ,
× RELATED மாணவர்களின் விவரங்களை எமிஸ்-ல் பதிவிட வேண்டும்