×

நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் மீண்டும் பரபரப்பு தனியார் பஸ் மோதியதில் சரிந்து கீழே விழுந்த மின்கம்பம்

*யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

நெல்லை : நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் தனியார் பஸ் மோதியதில் பக்கவாட்டுச் சுவர் சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தில் அங்கிருந்த மின்கம்பம் சரிந்து கீழே விழுந்தது. இருப்பினும் அப்போது சாலையில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.

நெல்லை மாநகரின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது திருவள்ளூவர் ஈரடுக்கு மேம்பாலமாகும். நெல்லை சந்திப்பு பகுதியையும், டவுன் பகுதியையும் இணைப்பது ஈரடுக்கு மேம்பாலம்தான். ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம ்என்ற பெருமையை பெற்று விளங்குகிறது.

இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு அரை நூற்றாண்டை கடந்து விட்ட நிலையில் பல இடங்களில் பாலம் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் பாலத்தின் பக்கவாட்டு பாதுகாப்பு தடுப்பு சுவர் பெயர்ந்து விழுந்து நெல்லை கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (63) படுகாயம் அடைந்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இருப்பினும் பாரம்பரியமிக்க நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தை ரூ. 2.85 கோடி செலவில் பழமை மாறால் புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் டவுனில் இருந்து நெல்லை சந்திப்பு பகுதிக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. ஈரடுக்கு மேம்பாலத்தின் மேல்பாலத்தில் வந்தபோது எதிரே வந்த மற்றொரு வாகனத்துக்கு இடம் விட்டு ஒதுங்கிய போது தனியார் பஸ் ஈரடுக்கு மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மின்கம்பத்தின் மீது மோதியது.

இதில் மேம்பாலத்தின் மேல் இருந்து மின்கம்பமும், பக்கவாட்டு சுவரும் பெயர்ந்து கீழே சாலையில் விழுந்தது. இதைப் பார்த்து பதறிய நெல்லை சந்திப்பு வியாபாரிகள், பாலம் போலீசாருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சந்திப்பு பாலம் போலீசார் மற்றும் மாநகர போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து ஆய்வு மேற்கொண்டதோடு மீட்பு பணிக்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர். அதன்பேரில் விரைந்து வந்த தொழிலாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்த புகாரின் பேரில் தனியார் பஸ் நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுவாக நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அதிக அளவில் வணிக நிறுவனங்கள் உள்ளதால் எப்போதும் அங்கு வாகனங்களில் பொருட்களை ஏற்றி இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருப்பர். ஆனால், நேற்று மேம்பாலத்தில் இருந்து மின்கம்பம் சாலையில் விழுந்த போது அதிர்ஷ்ட வசமாக யாரும் இல்லை. இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அத்துடன் பெரிய அளவில் அசம்பாவித சம்பவமும் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதி வியாபாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

The post நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் மீண்டும் பரபரப்பு தனியார் பஸ் மோதியதில் சரிந்து கீழே விழுந்த மின்கம்பம் appeared first on Dinakaran.

Tags : Nellai Erudku ,Nellai ,Nellai Junction ,Dinakaran ,
× RELATED ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்...