×

அரூர் அருகே பிரதான சாலையில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு

*டிராக்டர் வழங்க கலெக்டர் நடவடிக்கை

அரூர் : அரூர் அடுத்த ஜமனஹள்ளி ஊராட்சியில் ஜமனஹள்ளி, அம்பேத்கர் நகர், தென்னகரம், நாகப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராம மக்கள் குப்பைகளை கொட்டுவதற்காக, சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் குப்பை கிடங்கிற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளில் இருந்து சேகரமாகின்ற குப்பைகளை, மக்கள் அவ்வளவு தொலைவிற்கு கொண்டுசென்று கொட்ட முடியாத சூழல் இருந்து வருகிறது. இதனால் அம்பேத்கர் நகர் கிராமத்தை சேர்ந்த மக்கள், தர்மபுரி பிரதான சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
அதேபோல், மற்ற கிராம மக்கள் கோபாலபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், தர்மபுரி பிரதான சாலையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

இதனால் கடந்த 3 மாதமாக சாலையோரம் குப்பை மலை போல் குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில், பொக்லைன் மூலம் டிராக்டர்கள் வைத்து, குப்பைகளை அப்புறப்படுத்தி, குப்பை கொட்டும் இடத்திற்கு எடுத்துச்சென்று கொட்டி வருகின்றனர். இதனால் ஊராட்சி நிர்வாகத்திற்கு ₹10 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை செலவாகிறது.
மேலும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் தவிர்த்து, மக்காத பிளாஸ்டிக் பொருட்கள், கோழி கழிவுகள் என பல்வேறு வகையான கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த குப்பை கொட்டுகின்ற இடத்திற்கு அருகில், ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு கால்வாய் இருப்பதால், இந்த குப்பைகளால் ஏரி தண்ணீர் மாசடையும் நிலை ஏற்பட்டு வருகிறது.

அதேபோல் விவசாய நிலங்களில் உள்ள மண் தரமும் பாதிக்கப்படும் சூழல் இருந்து வருகிறது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர், குப்பைகளை எடுப்பதற்கு வாகனம் வேண்டும்.
அதனை தங்களது ஊராட்சி நிதியிலிருந்து வாங்கி கொள்கிறோம். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட கலெக்டர், சப் கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் என அனைவருக்கும் வழங்கியுள்ளனர். இதற்கு மாவட்ட கலெக்டர் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இன்னும் டிராக்டர் வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் சாலையோரம் மலைபோல் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.

எனவே இந்த குப்பைகளை அகற்றி கிராம மக்களை, தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்கு, உடனடியாக மாவட்ட நிர்வாகம் குப்பைகளை எடுக்க தேவையான டிராக்டர் வாங்குவதற்கான, அனுமதியை வழங்க வேண்டும் என கிராம மக்களும், ஊராட்சி நிர்வாகமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கூறுகையில், ‘ஜமனஹள்ளி ஊராட்சியில் தேங்குகின்ற குப்பைகளை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் குப்பைகளை எடுப்பதற்கு வாகன வசதி விரைவில் செய்து கொடுக்கப்படும். இதற்காக டிராக்டர்கள் வேண்டும் என கேட்டுள்ளார்கள். அதற்கான ட்ரெய்லர் இன்னும் வரவில்லை, வந்தவுடன் உடனடியாக ஜம்மனஹள்ளி ஊராட்சியில் குப்பைகளை அகற்றுவதற்கு டிராக்டர் வழங்கப்படும்’ என்றார்.

The post அரூர் அருகே பிரதான சாலையில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Arur ,Jamanahalli ,Ampedkar Nagar ,South Karam ,Nagapatti ,Dinakaran ,
× RELATED டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி