×

அடக்குமுறையில் இருந்து திமுக நிச்சயம் வெற்றிகரமாக வெளிவரும்: செந்தில் பாலாஜி கைது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கண்டனம்..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்திய நிலையில், இன்று நள்ளிரவில் கைது செய்திருக்கிறது. இதனிடையே நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் மீதான நடவடிக்கைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், தி.மு.க அமைச்சர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர். அந்த வகையில்,

அடக்குமுறையில் இருந்து திமுக நிச்சயம் வெற்றிகரமாக வெளிவரும்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

அடக்குமுறையில் இருந்து திமுக நிச்சயம் வெற்றிகரமாக வெளிவரும் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் டி.ஆர்.பி., திமுக இதுபோன்று பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி கைது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. திமுக மிகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறது. மக்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலினுக்கு நல்ல பெயர் உள்ளது. திராவிட மாடல் அரசை கண்டு பாஜக பயப்படுகிறது. பாஜக சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்கிறது. திமுகவை பற்றி இன்னும் பாஜகவுக்கு தெரியவில்லை. இதுபோன்ற பல மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்த இயக்கம் திமுக என்று குறிப்பிட்டார்.

செந்தில் பாலாஜி கைது: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக நமது ஜனநாயகம் மீது மீளமுடியாத சேதத்தை பா.ஜ.க. ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளது.

நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது: சமாஜ்வாதி

செந்தில் பாலாஜி கைது மூலம் சிபிஐ, அமலாக்கத்துறை மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகிவிட்டது என்று சமாஜ்வாதி கண்டனம் தெரிவித்துள்ளது.

The post அடக்குமுறையில் இருந்து திமுக நிச்சயம் வெற்றிகரமாக வெளிவரும்: செந்தில் பாலாஜி கைது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Minister ,DRP ,Senthil Balaji ,Raja ,Y.S.R. ,Congress ,Chennai ,Enforcement Directorate ,D.R.P. ,
× RELATED மகளிருக்கு கட்டணமில்லா...