×

மேட்டூர் அணை தண்ணீர் 2 நாளில் வந்து சேரும் குறுவை சாகுபடிக்கு உழவு பணிகள் மும்முரம்

திருவாரூர், ஜூன் 14: மேட்டூர் அணை தண்ணீர் 2 நாளில் வந்து சேரும் என்பதால், குறுவை சாகுபடிக்கு உழவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அரசு குறுவை தொகுப்பு வழங்கும் என முதல்வர் அறிவித்ததால், விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையானது நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்துவைக்கப்பட்டுள்ள நிலையில் சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி தி.மு.க தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று டெல்டா மாவட்டங்களில் ரூ 63 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டு விவசாயத்திற்குரிய நாளான ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணையினை முதல்வர் திறந்து வைத்தார். இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதலான அளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இந்நிலையில் கடந்தாண்டிலும், இதேபோன்று தூர்வாரும் பணிகள் நடைபெற்று மேட்டூர் அணையானது வரலாற்றிலேயே இல்லாத வகையில் முன்கூட்டியே மே மாதம் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட நீரானது, அடுத்த ஒருசில நாட்களிலேயே கடைமடை வரை சென்றதையடுத்து குறுவை சாகுபடியை விவசாயிகள் உடனடியாக துவங்கினர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக நடைபெற்று வந்த 97 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடியை தாண்டி கூடுதலாக 57 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரம் ஏக்கரில் 2 ஆண்டு காலமாக சாகுபடி நடைபெற்று வருகிறது.

நடப்பாண்டிலும் வழக்கம் போல், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்ற நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ரூ.12 கோடி மதிப்பில் ஆயிரம் கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. தஞ்சாவூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 9ம் தேதி தூர்வாரப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில் நடப்பாண்டிலும், குறுவை சாகுபடிக்காக நேற்று முன்தினம் (12ம் தேதி) மேட்டூர் அணையானது முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைத்தார். மேலும் குறுவை தொகுப்பு திட்டமும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் குறுவை சாகுபடியை முன்னிட்டு, ஏற்கனவே போர்வெல்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணை நீரானது, அடுத்து ஒருசில தினங்களில் கடைமடை வரை வந்துவிடும் என்று தெரிகிறது. இதையடுத்து குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் தங்களது வயல்களில் டிராக்டர் கொண்டு ஏர் உழுதல் மற்றும் விதை நாற்றாங்கால் அமைத்தல் போன்ற பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post மேட்டூர் அணை தண்ணீர் 2 நாளில் வந்து சேரும் குறுவை சாகுபடிக்கு உழவு பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Mattur dam ,Thiruvarur ,Thumpuram ,
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால்...