×

திருவேற்காட்டில் பரபரப்பு நடிகை திவ்யா வீட்டுக்கு அடியாளுடன் வந்த நடிகர் அர்னவ்: வீட்டுக்கு உரிமை கோரி சண்டை

சென்னை: திருவேற்காட்டில், நடிகை திவ்யா வீட்டிற்கு அடியாட்களுடன் நடிகர் அர்னவ் வந்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. சின்னத்திரை நடிகர் அர்னவ் தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த சின்னத்திரை நடிகை திவ்யாவை, சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கர்ப்பிணியாக இருந்த தன்னை அர்னவ் அடித்து சித்திரவதை செய்ததாக சில மாதங்களுக்கு முன்பு மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் அர்னவை கைது செய்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அர்னவ் தனியாக வசித்து வந்தார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திவ்யாவிற்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அர்னவிற்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி திவ்யா சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் மற்றும் பேட்டி கொடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று நடிகர் அர்னவ் தனது வக்கீல்கள் மற்றும் அடியாட்களுடன் திருவேற்காட்டில் தான் குடியிருந்த வீட்டிற்கு வந்தார். இந்த வீடு தனது பெயரில் இருப்பதாகவும், திவ்யாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு தனது வக்கீலுடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இந்த வீடு தனது பெயரில் இருப்பதாகவும், பிரச்னைக்கு பிறகு தான் வெளியில் தங்கி இருந்தேன். தற்போது தங்குவதற்கு இடம் இல்லாத காரணத்தால் தனது வீட்டிற்கு வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால் திவ்யா உள்ளே விட அனுமதி மறுப்பதாகவும் அவர் தன்னுடன் வசிக்க கூடாது எனவும் அர்னவ் தெரிவித்தார். இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளிக்கும் படியும், அவர்கள் தரப்பிலிருந்து ஆவணங்களை கொண்டு வருமாறு போலீசார் கூறியுள்ளனர். இந்த நிலையில் அர்னவ் தரப்பினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதையடுத்து, திவ்யா கூறுகையில்:
அர்னவ் கைதாகி சிறைக்கு சென்ற பிறகு தன்னையும் குழந்தையையும் பார்க்க வீட்டிற்கு வரவில்லை. தற்போது அடியாட்கள், வக்கீல்களுடன் வந்து என்னை மிரட்டுகிறார். ஆரம்ப நாள் முதல் வீட்டை வாங்க எனது நகையை கொடுத்தேன். மாத தவணையை கட்டி வருகிறேன். இந்த வீடு எனக்கு சொந்தமானது தனிப்பட்ட முறையில் அவர் வந்து பேசியிருக்கலாம். தேவையில்லாமல் அடியாட்கள் மற்றும் வக்கீல்களுடன் வந்து மிரட்டுகிறார். நிபந்தனை ஜாமீனில் அர்னவ் வந்த பிறகு, தான் இருக்கும் வீட்டிற்கு அவர் வரக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு இருக்கிறது. இது குறித்து திருவேற்காடு போலீசில் புகாராக அளிக்க உள்ளேன்’’ என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, இரு தரப்பினரையும் விசாரித்த பிறகு ஆவணங்களை பரிசோதித்து முடிவு எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருவேற்காட்டில் பரபரப்பு நடிகை திவ்யா வீட்டுக்கு அடியாளுடன் வந்த நடிகர் அர்னவ்: வீட்டுக்கு உரிமை கோரி சண்டை appeared first on Dinakaran.

Tags : Arnav ,Divya ,Thiruveludad ,Chennai ,
× RELATED காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில்...