×

40 ஆண்டுகால மயான பிரச்னைக்கு தீர்வு

சத்தியமங்கலம் :  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொமரபாளையம்  ஊராட்சிக்கு உட்பட்ட தாசரிபாளையம் கிராமத்தில் 1 மற்றும் 2வது வார்டு  பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 40 ஆண்டு காலமாக மயானம் இல்லாததால்  அப்பகுதியில் உள்ள பள்ளத்தை மயானமாக பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து  பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு  அளித்தும் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாத நிலையில் கிராம மக்கள்  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.சி.பி. இளங்கோவிடம்  முறையிட்டனர். மேலும் கடந்த அக்டோபர் 2ம் தேதி நடைபெற்ற கிராம சபைக்  கூட்டத்திலும் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து  வருவாய்த்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஒன்றியக்குழு  தலைவர்  இளங்கோ தலைமையில் தாசில்தார் ரவிசங்கர் முன்னிலையில் அப்பகுதியில்  புறம்போக்கு இடம் உள்ளதா என  நில அளவையர் மூலம் நில அளவை செய்யப்பட்டதில்  பள்ளத்தை ஒட்டியுள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை  நில அளவை செய்து மயானத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊராட்சி வசம்  ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய  பொறுப்பாளர் தேவராஜ், கொமரபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், துணைத் தலைவர்  ரமேஷ், விஏஓ சிலம்பரசன், கோணமூலை ஊராட்சி தலைவர் செந்தில்நாதன், மாவட்ட  பிரதிநிதி மாணிக்கம், உள்ளிட்டோர் உடனிருந்தனர். மயானத்திற்கு  இடம்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தகன மேடை, தண்ணீர் மற்றும்  சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்  என ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தெரிவித்தார்….

The post 40 ஆண்டுகால மயான பிரச்னைக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Tasaripalayam Village ,Satyamangalam Panchayat Union ,Komarapalayam Panchayat Union ,Dinakaran ,
× RELATED குழப்பம் ஏற்படுத்தும் கருத்தை பேசிய...