×

ஜமாபந்தியில் பரபரப்பு தீக்குளிக்க முயன்ற மூதாட்டி: போலீசார் தடுத்தனர்

திருத்தணி: திதிருத்தணி தாலுகா மாமண்டூர் கிராமத்தில், 12 தெருக்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர்கள் விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலிகளாக உள்ளனர். இந்த கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் பல தலமுறைகளாக வீடுகள் கட்டி வசிக்கின்றனர். குடியிருக்கும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என பலமுறை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து மனு அளித்துவந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்த ரத்தினரெட்டி என்பவரின் மனைவி வள்ளியம்மாள் (60), தான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்குமாறு கடந்த 10 ஆண்டுகளாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறார்.

ஆனால் அவருக்கு பட்டா வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில் திருத்தணி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், வள்ளியம்மாள் தனக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்க வந்தார். அப்போது, பட்டா வழங்காவிட்டால் தாலுகா அலுவலகத்திலேயே தன்மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்திக் கொள்வேன் என கூறினார். இதற்காக வாட்டர் கேனில் பெட்ரோலை நிரப்பி அதனை ஒரு பையில் கொண்டு வந்திருந்தார்.

அப்போது அங்கிருந்த திருத்தணி போலீசார் வள்ளியம்மாள், பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் வள்ளியம்மாளை பாதுகாப்புடன் ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஜமாபந்தி அலுவலர் தீபாவிடம் வள்ளியம்மாள் மனு கொடுத்தார். தொடர்ந்து தீபா, மனுவை பெற்றுக்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இச்சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில்ல் பரபரப்பு ஏற்பட்டது.

* சம்மந்தம் இல்லாதவர்களுக்கு பட்டா
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, திருத்தணி வட்டத்தில் மாமண்டூர், தரணிவராகபுரம், மேதினிபுரம், தாழவேடு ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு சிலரின் பெயர்களில் அரசு பட்டா இருக்கிறது. எனவே அதிகாரிகள் இணைந்து இந்த நீண்ட கால பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

The post ஜமாபந்தியில் பரபரப்பு தீக்குளிக்க முயன்ற மூதாட்டி: போலீசார் தடுத்தனர் appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Tiruthani ,Mamandur ,Tithiruthani taluk ,
× RELATED திருத்தணி அருகே பேருந்தில் சீட்...