×

மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு போட்டு திடீர் தர்ணா

பாப்பாரப்பட்டி, ஜூன் 14: பாப்பாரப்பட்டி அருகே 700க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வாக வந்ததால், மின் வாரிய அலுவலத்திற்கு மக்கள் பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
பாப்பாரப்பட்டி அருகே பாரதிபுரம், சஜ்ஜலஹள்ளி, பனைகுளம், பிக்கிலி கொல்லப்பட்டி, பெரியூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு பல மாதங்களாக நேரில் சென்று மின் கணக்காளர் முறையாக மின் கணக்கீடு செய்யாமல், அலுவலகத்தில் இருந்தபடியே கணக்கீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று நேரில் சென்ற பணியாளர்கள், கணக்கீடு செய்த போது இதுவரை ₹180 கட்டணமாக வந்த நிலையில் திடீரென, ₹18,870 என அதிக கட்டணம் வந்ததாக செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி உள்ளனர். இதேபோல், சுற்று வட்டார கிராம பகுதிகளில், இது போன்ற 700க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டதாக அவர்களது செல்போனுக்கு மெசேஜ் சென்றுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர், பாப்பாரப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு நேற்று சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் முறையான பதில் அளிக்காமல், அலட்சிய போக்குடன் பதில் அளித்ததன் காரணமாக ஆத்திரமடைந்த பொது மக்கள், பிக்கிலி ஊராட்சி மன்ற தலைவர் விநாயகம், மாதேஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, ஓ.ஜி.ஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சேதுமுருகன், வேப்பிலைஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி ஆகியோருடன் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று பூட்டு போட்டு, அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மின்வாரிய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, முறையான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறிய பின்னர், மக்கள் கலைந்து சென்றனர்.

The post மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு போட்டு திடீர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Paparapatti ,
× RELATED கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது