×

மாமல்லபுரம் நுழைவாயில் சிற்பக்கலை தூண் சுற்றுசுவர் உடைப்பு: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மாமல்லபுரம்: பூம்புகார் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம், தமிழக கைவினை கலைஞர்களின் கைவண்ணத்தில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை ஊக்கப்படுத்த செயல்பட்டு வருகிறது. மாமல்லபுரத்திற்கு வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும், கைவினை கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் வகையில், ரூ.5.61 கோடி மதிப்பில் கைவினை சுற்றுலா கிராமம் எனும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இத்திட்டத்தில், முதல் கட்டமாக ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்துரதம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கடைகளை அழகுப்படுத்துதல், மாமல்லபுரம் அடுத்த காரணை கிராமத்தில் வசிக்கும் 28க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களின் குடியிருப்புகளை அழகுபடுத்துதல், மழைநீர் செல்லும் கால்வாய், மின்விளக்கு, அலங்கார வளைவு, மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயில் அருகே 45 அடி உயர சிற்பக்கலைத் தூண் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்தது. மேலும், கடந்தாண்டு மாமல்லபுரத்தில் நடந்த 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வரவேற்கும் விதமாக 45 அடி உயர சிற்பக்கலை தூண் பணி மட்டும் முழுமைையாக முடிக்கப்பட்டது.

இந்த சிற்பக்கலை தூண் நான்கு நிலைகளை கொண்டுள்ளது. தரையில், இருந்து முதல் நிலையில் 4, பெரிய யானைகள், 4 சிறிய யானைகள், இரண்டாம் நிலையில் 4 மயில்கள், மூன்றாவது நிலையில் 4 யாழி, 4 பெரிய யானைகள், 4 சிறிய யானைகள், நான்காம் நிலையில் 4 பெரிய சிங்கங்கள் என வெளிநாட்டினரை கவரும் வண்ணம், ஒரு கலை நயத்துடன் உருவாக்கப்பட்டது. இதனை, கடந்தாண்டு ஜூலை 27ம் தேதி வெளிநாட்டு சதுரங்க வீரர்களை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, சிற்பக்கலை தூணை பூம்புகார் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழகம் பராமரித்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிற்பக்கலை தூணின் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து சேதமடைந்துள்ளது. இந்த சுற்றுச்சுவர் தானாகவே இதுடிந்து விழுந்ததா? அல்லது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இடிந்து விழுந்ததா? என தெரியவில்லை. எனவே, பூம்புகார் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழக அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இடிந்து விழுந்த பகுதியை சரிசெய்து தூய்மையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் நுழைவாயில் சிற்பக்கலை தூண் சுற்றுசுவர் உடைப்பு: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mammallapuram ,Gateway ,Mamallapuram ,Tamil Nadu Handicraft Industries Development Corporation ,Poombugarh ,Mammallapuram Gateway ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...