×

ரஞ்சன் பால் அதிரடி அரை சதம் சேப்பாக் ரன் குவிப்பு

கோவை: சேலம் ஸ்பார்டன்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன் குவித்தது. எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. பிரதோஷ் ரஞ்சன் பால், கேப்டன் நாராயண் ஜெகதீசன் இணைந்து சேப்பாக் இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9 ஓவரில் 91 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.

ஜெகதீசன் 35 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹரிகரன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து ரஞ்சன் பால் – அபராஜித் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்தனர். ரஞ்சன் பால் 30 பந்தில் அரை சதம் அடித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஞ்சன் 88 ரன் (55 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சன்னி சாந்து பந்துவீச்சில் ஆகாஷ் சும்ராவிடம் பிடிபட்டார்.

அபராஜித் 29 ரன்னில் (19 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த ஹரிஷ் குமார் 8 ரன் எடுத்து ரன் அவுட்டானார். ராஜகோபால் சதீஷ் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் சஞ்சய் யாதவ் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட… சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன் குவித்தது (உதிரிகள்:22). சஞ்சய் 31 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), சசிதேவ் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 20 ஓவரில் 218 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது.

The post ரஞ்சன் பால் அதிரடி அரை சதம் சேப்பாக் ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ranjan Paul ,Chepak ,Coimbatore ,TNPL T20 league ,Salem Spartans ,Chepauk Super Gillies ,Chepauk ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...