×

ஒன்றிய அமைச்சர்களையே அலறவிட்டவர் ஜெயலலிதா பெட்டிப்பாம்பாக அடங்கி கிடக்கும் அதிமுகவினர்: விமானநிலையம், நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய காலம் மலையேறிப்போச்சா?

சென்னை: ஜெயலலிதா இருந்தபோது ஒன்றிய அமைச்சர்களையும், தேர்தல் ஆணையர்களையும் அலறவிட்ட அதிமுகவினர், இன்று ஜெயலலிதாவைப் பற்றி அண்ணாமலை விமர்சனம் செய்த பிறகும் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடப்பது வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருப்பதாக மற்ற கட்சிகளின் தொண்டர்களும், நிர்வாகிகளும் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர். தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக அதிமுகவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். அதற்கு முக்கிய காரணம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.

குறிப்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் தங்கள் சமூகத்தில் யார் பெரியவர் என்ற எண்ணம் வளரத் தொடங்கியதால், இருவருக்குள்ளும் முட்டல், மோதல் தொடங்கியது. ஈரோடு இடைத்தேர்தல் காலத்திலேயே தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அண்ணாமலை விரும்பினார். ஆனால் மேலிடம் சம்மதிக்கவில்லை. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் தான் மாநில தலைவர் பதவியை விட்டு விலகி, பழையபடி துணை தலைவராகவே இருந்து விடுவேன் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.

அதன்பின்னர் ஜெயலலிதாவும், தானும் ஒன்றுதான் என்று அவருக்கு இணையாக தன்னை உயர்த்திப் பேசி வந்தார். அப்போது அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தொண்டர்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றவர்கள் மட்டுமே குரல் கொடுத்தனர். வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட தலைவர்கள் அமைதியாக இருந்து விட்டனர். இதனால் எதிர்ப்பு பெரிதாக எழவில்லை என்று கருதிய அண்ணாமலை, ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96ம் ஆண்டுதான் மோசமான ஊழல்நிறைந்த ஆட்சிக்காலம். ஜெயலலிதா ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர் என்று பேட்டியளித்தார். ஆங்கில நாளிதழில் காலையில் வெளியான இந்த பேட்டிக்கு ஒரு அதிமுகவினர் கூட பதில் தெரிவிக்காமல் இருந்தனர்.

பிற்பகலில் சமூக வலைதளங்களில் கண்டனம் எழ ஆரம்பித்த பிறகுதான், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், ஜெயலலிதாவை இவ்வளவு தாழ்த்தி விமர்சனம் செய்திருந்தாலும், மாநிலம் முழுவதும் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள ராணுவ கட்டுக்கோப்பான கட்சி என்று கூறப்பட்டு வந்த அதிமுகவினர் துளிக்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏன் 4 பேர் கூடி நின்று கோஷங்கள் கூட போடவில்லை. இதை உற்று நோக்கும் ஜெயலலிதாவின் அனுதாபிகள் அதிமுகவினருக்கு என்ன ஆச்சு? அவர்கள் பெட்டிப்பாம்பாக அடங்கி கிடக்கும் காரணம்தான் என்ன என்று ஆதங்கத்துடனும், அதிர்ச்சியுடனும் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, தொடர்ந்து பேட்டி கொடுப்பது, நீதிமன்றத்தில் வழக்குப்போடுவது என்று செயல்பட்டார். இதனால், கொதித்து எழுந்த அதிமுக தொண்டர்கள், குறிப்பாக மகளிர் அணியினர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே போராட்டம் நடத்தினர். மகளிர் அணி நடத்திய போராட்டம், உலக பிரசித்தி பெற்ற விவகாரமாக இருந்தாலும், ஜெயலலிதாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தனர் அதிமுக தொண்டர்கள். அதேபோலத்தான், தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்தபோது இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அவர் விமானநிலையத்தில் இருந்து வெளியில் வந்தபோது தாக்குதல் நடந்தது.

அதோடு நிற்கவில்லை அதிமுக தொண்டர்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஒன்றிய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், திருச்சி விமானநிலையத்துக்கு வந்தபோது அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தொண்டர்கள் விமானநிலையத்துக்குள்ளேயே புகுந்து விட்டனர். ஏன் ஓடுதளத்திலேயே போராட்டம் நடத்தி விமானியை அதிர வைத்தனர். ஒன்றிய அரசே கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு போராட்டம் நடத்தினர். ஏன் ஜெயலலிதா, ஒன்றிய அமைச்சராக இருந்த அருணாச்சலத்தை விமானத்தில் ஏற்றாமல் இறக்கி விட்டுச் சென்று விட்ட சம்பவமும் நடந்தது. ஜெயலலிதாவுக்காக பல போராட்டங்கள். மாணவிகள் வந்த பஸ்சைக் கூட ெகாளுத்தி 3 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தனர். பல பஸ்கள் நொறுக்கப்பட்டன. ரயில்கள் தாக்கப்பட்டன. ஜெயலலிதா சிறை சென்றபோதுகூட மாநிலமே ஸ்தம்பித்தது. எம்ஜிஆர் மரணமடைந்தபோது கூட மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது.

அப்படி போராட்ட குணம் கொண்ட அதிமுகவினர், இன்று ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்து 2 நாள் ஆகியும் ஒரு சிறு எதிர்ப்பைக் கூட தெரிவிக்காமல் உள்ளனர். பெயருக்கு ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம் ஆகியோர் மட்டுமே கண்டனம் தெரிவித்தனர். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் என்று கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மானத்தை அப்படியே படித்து விட்டு, எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் நழுவிவிட்டார். தலைவர்கள் அமைதியாக இருப்பதற்கு காரணம், மடியில் கனம். இதனல் வழியல் பயம் என்கின்றனர் அதிமுக அனுதாபிகள்.

அண்ணாமலையை கேள்வி கேட்டால், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டு வரும் என்ற பயத்தால்தான் அனைவரும் அமைதியாகிவிட்டனர். ஏனென்றால், எடப்பாடியின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் ஒன்றிய பாஜ அரசின் ஆதரவுடன் சொகுசாக இருந்தனர். வேண்டியதை சுருட்டினர். எல்லா திட்டத்திலும் புகுந்து விளையாடினர். தேர்தல் நேரத்தில் கூட டெண்டர் விட்டு முன் பணம் வாங்கிக் கொண்டனர். அதிமுக ஆட்சியில் போட்ட டெண்டருக்கான பணத்தையே திமுக ஆட்சியில் ஓராண்டு முழுவதும் கொடுக்கவேண்டிய நிலையை உருவாக்கிவிட்டு, முன் பணம் வாங்கிக் கொண்டு சென்று விட்டனர் என்று அதிகாரிகள் சொல்லும் அளவுக்கு புகுந்து விளையாடினர்.

இந்தப் பணத்தில்தான் சொத்துக்களாக வாங்கிக் குவித்துள்ளனர். ஜெயலலிதாவுக்காக நான் ஏன் குரல் கொடுக்க வேண்டும். நான்கரை காலம் சொகுசாக ஆட்சிக் கட்டிலில் பல கனவுகளுடன் படுத்த உறங்கிய அதிமுக மாஜி அமைச்சர்கள், மீண்டும் அதே கனவுடன் இலவு காத்த கிளிபோல காத்திருப்பதால், மறைந்த தலைவருக்காக நாம் குரல் கொடுத்து, நம்முடைய வருமானத்தை ஏன் இழக்க வேண்டும் என்று நினைப்பதால்தான் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவுகம் அதிமுக அனுதாபிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மூச்சுக்கு முன்னூறு தரம், அம்மா, அம்மா என்று சொல்கிறவர்களின் விசுவாசம் இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஒரு வீடியோவில் சிறுவன் ஒருவனிடம் இளைஞர் ஒருவர், சாப்பாடு முக்கியமா, சங்கம் முக்கியமா என்று கேட்பார். அந்த அந்த சிறுவன் சாப்பாடுதான் முக்கியம் என்று கூறி அழுவான். அதுதான் தற்போது ஞாபகத்துக்கு வருவதாக அதிமுக அனுதாபிகள் தெரிவிக்கின்றனர். முன்பு போராட்ட குணம் கொண்டவர்களாக இருந்த அதிமுகவினர், இன்று ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்து 2 நாள் ஆகியும் ஒரு சிறு எதிர்ப்பைக் கூட தெரிவிக்காமல் உள்ளனர்.

The post ஒன்றிய அமைச்சர்களையே அலறவிட்டவர் ஜெயலலிதா பெட்டிப்பாம்பாக அடங்கி கிடக்கும் அதிமுகவினர்: விமானநிலையம், நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய காலம் மலையேறிப்போச்சா? appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Union ,AIADMK ,Chennai ,Commissioners ,Annamala ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி...