×

டிஎன்பிஎஸ்சி நடத்திய 122 தேர்வுகளுக்கான உத்தேச விடைகள் வெளியீடு: 20ம் தேதிக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்

சென்னை: தமிழ்நாட்டில் நடந்த 122 துறைகளின் தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட 151 துறை தேர்வுகள் கடந்த மே 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை( மே 20, 21ம் தேதி நீங்கலாக) வரை கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகை என்ற புதிய பாடத்திட்டத்தின்படி சென்னை மற்றும் புதுடெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடந்தது. இத்தேர்வின் கொள்குறி வகை சார்ந்த 122 தேர்வுகளின் உத்தேச விடைகள் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

துறைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுதிய கொள்குறி வகை தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் (ஜூன் 14ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி மாலை 5.45 மணி வரை) விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு tnpsc.qdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதாரரின் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால் அத்தகவல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி நடத்திய 122 தேர்வுகளுக்கான உத்தேச விடைகள் வெளியீடு: 20ம் தேதிக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : DNPSC ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Government Personnel Examinerary ,DNBSC ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்