×

ஜெயலலிதா பெயரை வைத்துக்கொண்டு அரசியல் செய்பவர்கள் அண்ணாமலையை அவதூறு பேசுவது வேடிக்கையாக உள்ளது: அதிமுகவுக்கு பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன் கடும் கண்டனம்

சென்னை: ஜெயலலிதா பெயரை வைத்துக்கொண்டு அரசியல் செய்பவர்கள், அண்ணாமலை பற்றி அவதூறு பேசுவதும், குறை சொல்வதும் வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது என்று கரு.நாகராஜன் கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் நேற்று அளித்த பேட்டி: மக்களின் தலைமையை ஏற்கும் பிரதிநிதித்துவம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு இல்லை. அண்ணாமலைக்கு இருக்கும் ஆற்றல் இவர்களுக்கு கிடையாது. அவரை பற்றி பேசும் தகுதிக்கூட அவர்களுக்கு கிடையாது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய சிறிது நேரத்துக்கு பிறகு அவரிடம் கேட்டாலே தெரியாது.
அவர் பேசிய அனைத்தும் அபத்தமானது. அண்ணாமலை தனி நபர் அல்ல.

தமிழக பாஜ என்ற தனி கட்சி கிடையாது. பாஜ என்பது தேசத்துக்கும் ஒரே கட்சி தான். அதில் மாநிலத்தை பார்த்து கொள்ளும் தலைவர் அண்ணாமலை. தனி தலைமை, தனி திட்டங்களோடு அவர் செயல்படுவது இல்லை. தலைவர் அண்ணாமலை வளர்ச்சியை பொறுக்கமுடியாமல், உள்நோக்கத்தோடு சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் பேசுவதை மக்கள் எள்ளி நகையாடிக்கொண்டிருக்கின்றனர். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அந்த 3 பேர் மீது கண்டன தீர்மானம் வருமோ என்று நான் எதிர்பார்த்தேன்.

ஆனால் அதற்கு மாறாக எங்களது மாநில தலைவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வந்ததும், அந்த தீர்மானத்துக்கு முன்னதாக பாஜவுக்கும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் இருக்கிற தொடர்புகளை எல்லாம் சுட்டிக்காட்டியதும் நாங்கள் வியப்போடு பார்த்தோம். ஜெயலலிதா மீது பிரதமர் உள்பட அனைவரும் மரியாதை வைத்திருக்கிறோம். அவரை போற்றுவதற்கு தயாராக இருக்கிறோம். கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களை கண்டித்திருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

அதை விட்டு விட்டு, மாநில தலைவரை தனிமைப்படுத்தி பாஜவில் அவர் இல்லாததை போன்று கற்பனையோடு தீர்மானங்களை போடுவது வருந்தத்தக்கது. வேதனை அளிக்கிறது. அண்ணாமலை மீது கண்டன தீர்மானம் போட்டதை நாங்கள் எதிர்க்கிறோம். அண்ணாமலை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை தரக்கூடிய தலைவராக விளங்குகிறார். எங்களை4 இடங்களில் வெற்றி பெற வைத்ததாக அவர்கள் கூறுகிறார்கள். 66 இடங்களில் அதிமுக வெற்றி பெற நாங்களும் உதவினோம். அதில் ஒன்றில் கூட சி.வி.சண்முகம் வெற்றி பெறவில்லை. கூட்டணி என்றால் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. அண்ணாமலை சாதாரணமாக அரசியலுக்கு வரவில்லை. மாமூல் வாங்கும் போலீஸ் அதிகாரி அல்ல. அரசியலுக்காக கைகட்டி பிழைக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அவரை தனியாக ஒதுக்கி வைத்து விட்டு, பாஜ உடன் உறவு வைப்பதும் எப்படி நியாயமாக இருக்கமுடியும்? ‘என் மண் என் மக்கள்’ பயணத்தை தொடங்குவதற்கு முன்பு கோப்பு-2 வெளியிடப்படும் என்று அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார் என்றார்.

The post ஜெயலலிதா பெயரை வைத்துக்கொண்டு அரசியல் செய்பவர்கள் அண்ணாமலையை அவதூறு பேசுவது வேடிக்கையாக உள்ளது: அதிமுகவுக்கு பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Annamalai ,BJP ,Vice President ,Karu Nagarajan ,AIADMK ,Chennai ,Jayalalitha ,
× RELATED தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜவினர் கைது