×

புல்லட்சாமி ஆதரவு அதிகாரியின் கரன்சி ஆட்டம் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

‘‘என்னை ஒன்றுமே செய்ய முடியாது, அந்த அளவுக்கு எனக்கு பவர் இருக்கு என்று சொல்லும் அதிகாரி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புல்லட்சாமி ஆளும் மாநிலத்தில் உள்ள மாவட்ட நிர்வாகத்தில் இருக்கும் ‘நல்ல’ அதிகாரி, உள்ளாட்சி துறை பொறுப்பையும் கவனிக்கிறாராம். உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடியில் துறை தத்தளிக்கிறதாம். இதனால் அரசே உள்ளாட்சி துறையில் இருந்து வரும் வருவாயை எடுத்துக்கொண்டு மற்ற அரசு துறைகளுக்கு வழங்குவது போல சம்பளத்தை நேரடியாக வழங்க வேண்டும் என்று கேட்கிறார்களாம். உள்ளாட்சி துறையின் இந்த அவலமான நிலையை மாற்றுவதற்கும், வருவாயை பெருக்கவும் ராமநாதன் கமிட்டியை அரசு அமைச்சதாம். அவர் கொடுத்த பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால் அரசுக்கு வருவாய் கொட்டுமாம். ஆனால், ராமநாதன் கமிட்டி அளித்த பரிந்துரைகளை தூக்கி குப்பையில் போட்டுட்டாராம் புல்லட்சாமியின் ஆதரவு பெற்ற அந்த ‘நல்ல’ அதிகாரி.

அதற்கு பதிலாக, தன்னுடைய பரிந்துரைகள், தான் நினைப்பதை தான் அந்த அதிகாரி உள்ளாட்சி துறையில் செயல்படுத்தி வருகிறாராம். இதற்காக, வருவாய் அதிகாரி பணியிடங்களில் தனக்கு வேண்டப்பட்ட இருவரை நியமித்துள்ளாராம். வருவாய் அதிகாரிகளை பொறுத்தவரை வருவாய் துறைக்கு அனுபவம் பெற்ற ஆர்ஓக்களைதான் நியமிக்க வேண்டுமாம். ஆனால், செல்வாக்குள்ள அந்த ‘நல்ல’ அதிகாரி விதிகளை காற்றில் பறக்கவிட்டு கரன்சி பார்க்க அவர்களை பயன்படுத்தி வருகிறாராம்.
உதாரணமாக, கடைகளில் அடிக்காசு வசூலித்தல், உள் வாடகைக்கு விடுவது, உரிமம் வழங்குவதில் ஏகப்பட்ட முறைகேடாம். இதனால, உள்ளாட்சி துறையின் சொத்துகள் எல்லாம் காணாமல் போய் கொண்டே இருக்காம். இதையெல்லாம் புகாராக தெரிவித்தாலும் நடவடிக்கை என்னவோ பூஜ்ஜியமாகவே இருக்காம். கலெக்‌ஷன் வசூலிக்கும் அதிகாரிகளிடம், நான் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறேன் என தன்னுடைய ஒட்டுமொத்த கரத்தை நீட்டுகிறாராம்.

நானே இந்த துறை வேண்டாம் என்று விட்டு கொடுத்தால்தான், என்னை மாற்றுவார்கள். அதுவரைக்கும் நான்தான். ஏனெனில் புல்லட்சாமியின் வலது, இடது என எந்த பக்கமும் உட்காரும் செல்வாக்கு எனக்குதான் இருக்கிறது என காலரை தூக்கிவிட்டு கெத்து காட்டுகிறாராம். இவரை பார்த்து மற்ற துறை அதிகாரிகள் எல்லாம் செல்வாக்கு இருக்கும் வரை இந்த அதிகாரியின் ஆட்டத்த பார்க்கலாம். பிறகு, காணாமல் போன அதிகாரிகள் பட்டியலில் பெயர் தெரியாத துறையில் இருக்க வேண்டியதுதான்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாமரை பிரமுகர் யாரை மிரட்டி பணம் பறித்தாராம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் தாமரைக்கட்சி பிரமுகர் ஒருவர் வலம் வருகிறார். இவர், ஒவ்வொரு பேரூராட்சி அலுவலகத்துக்கும் சென்று, அங்குள்ள செயல் அலுவலரை மிரட்டி பணம் வசூலிப்பதில் படு கில்லாடியாம். சமீபத்தில் அங்குள்ள ஒரு பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து, எங்கள் கட்சி மாநாடு சேலத்தில் நடக்கிறது. அதற்கு நன்கொடை கொடுங்கனு கேட்டாராம். ஆனால், அந்த அதிகாரியோ, கோவையில் மாநாடு நடந்தால்கூட பரவாயில்லை. சேலத்தில் நடக்கும் மாநாட்டுக்கு நான் எதற்கு நன்கொடை தரனும்ன்னு திருப்பி கேட்டாராம். உடனே அந்த ஆசாமி, அப்படீன்னா, என்னை ஜாதியை சொல்லி திட்டினாருன்னு போலீசில் புகார் கொடுப்பேன் என மிரட்டல் விடுத்துள்ளாராம். இதனால், பயந்துபோன அந்த அதிகாரி, பத்தாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து அனுப்பியுள்ளார். இதனால், குஷியாகிப்போன அந்த தாமரைக்கட்சி பிரமுகர், ‘‘இப்படி அடிக்கடி ஏதாச்சும் கொடுத்துக்ெகாண்டே இருந்தால், நான் எதற்கு போலீசுக்கு போகப்போறேன். நீங்கள் வாங்கும் கமிஷனில் எங்களுக்கும் ஒரு பங்கு கொடுத்தால், உங்க வண்டியும் ஓடும். எங்க வண்டியும் ஓடும்னு சொல்லிவிட்டு கிளம்பிட்டாராம். அவரது அட்வைசால் அந்த அதிகாரி மிரண்டுபோய் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ திருடர்கள் மீது புகார் கொடுக்க கூட வராமல் பதுங்கிய நிதிநிறுவன மோசடி நபர்களை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டம் மட்டுமில்லாம, பல மாவட்டங்கள்லயும் ஐ என்ற எழுத்துல தொடங்கி எஸ் என்று முடியுற 3 எழுத்து பெயர்ல நிதி நிறுவனம் நடத்தி வந்தாங்க. முதல்ல வாங்குன பணத்தை சரியாக கொடுத்தவங்க, அப்புறம் மொத்தமாக சுருட்டிகிட்டு போய்ட்டாங்க. இதுல அந்த மோசடி செய்த நபரின் வீடு வெயிலூர் சிட்டி காட்டுப்பாடியில தான் இருக்காம். அந்த வீட்டுல கட்டுக்கட்டாக பணம், நகை இருக்குறதாக திருடர்கள் மோப்பம் பிடிச்சிருக்காங்க. இதனால கொஞ்ச நாளைக்கு முன்னாடி மக்கள் பணத்தை சுருட்டியவரோட, காட்டுப்பாடி வீட்டுல 2 பலே திருடர்கள் புகுந்திருக்காங்க. அப்ப பக்கத்து வீட்டுக்காரரு, அதை பார்த்துட்டு, உடனே காக்கிகளுக்கு சொல்லவே, கையும் களவுமாக காக்கிகள் பலே திருடர்களை பிடிச்சுட்டாங்களாம். அப்புறம், புகார் கொடுக்க நிதி நிறுவனத்தினரை அழைச்சாங்களாம். ஆனால் எல்லோரும் காக்கிகளுக்கு பயந்து ஒளிந்து கொண்டு இருக்காங்களாம்.

அதனால போலீசுல புகார் கொடுக்க யாருமே வரலையாம். காரணம் என்ன என்று விசாரித்தால், புகார் கொடுக்க போனா, திருடர்களோட சேர்த்து நமக்கும் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைவிலங்கு போட்டுருவாங்கன்னு பயமாம். இதை தான் திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி என்று சொல்லி வருத்தப்படுகிறார்கள் பணம் கட்டி ஏமாந்தவர்கள். இதனால, வேற வழியில்லாம காக்கிகள் பக்கத்து வீட்டுக்காரர்கிட்டயே புகார் வாங்கி பலே திருடர்களை கைது செஞ்சாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post புல்லட்சாமி ஆதரவு அதிகாரியின் கரன்சி ஆட்டம் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Bullutsamy ,Karansi Atom ,Yananda ,Karansi ,Bullutsami ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...