×

பாமக பிரமுகர் கொலை வழக்கு அனைத்து பிரச்னைகளிலும் தலையிட்டதால் தீர்த்து கட்டினோம்: குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

செங்கல்பட்டு: நின்னகாட்டூர் பகுதியில், ‘அனைத்து பிரச்னைகளிலும் தலையிட்டதால், பாமக பிரமுகர் காளியை தீர்த்து கட்டினோம்’ என, குற்றவாளிகள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட நின்னக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் காளி (40). பாமக பிரமுகரான இவர், மறைமலைநகர் நகர வன்னியர் சங்க தலைவராக இருந்து வந்தார். மேலும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் காளி டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது, பைக் மற்றும் காரில் வந்த மர்ம கும்பல் காளியை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து, அந்த மர்ம கும்பல், மின்னல் வேகத்தில் வாகனங்களில் ஏறி, அங்கிருந்து தப்பி சென்றது. மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், குற்றவாளிகளை போலீசார் விரட்டியபோது, ஊரப்பாக்கம் சிக்னல் அருகே பைக்கை போட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பிக்க முயற்சித்தனர். அப்போது, விக்னேஷ்வரன் என்பவர் மட்டும் சிக்கினார். அவரை மடக்கி, பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது, விக்னேஷ்வரன் போலீசாரிடம், ‘‘கடந்த மே 23ம் தேதி நின்னக்காட்டூர் பகுதியை சேர்ந்த கெளசிக், சஞ்சய் ஆகியோரை மறைமலைநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சபரி கும்பல் கடுமையாக தாக்கியது. இதுகுறித்து காளி இருதரப்பினரிடமும் சமரசம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பிறகு கௌசிக், சஞ்சய் ஆகியோர் நின்னக்காட்டூர் பகுதியை சேர்ந்த வாலிபர்களுடன் சேர்ந்து, சபரி கும்பலை சேர்ந்த எனது தம்பியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவத்திற்கு பின்னால் காளி இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், நின்னகாட்டூர் பகுதியில், குடும்ப தகராறு உள்பட அனைத்து பிரச்னைகளிலும் காளி தலையிட்டு வந்துள்ளார்.

அவருக்கு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் துணையாக இருந்தனர். எனவே, அவரை வளர விடக்கூடாது என சபரி கும்பல் முடிவு செய்துள்ளனர். அதன்படி, காளியை கொலை செய்ய திட்டமிட்டு, நேற்று முன்தினம் சபரி (எ) சபரேசன் தலைமையில், வெங்கி (எ) வெங்கடேஷ்வரன் மற்றும் தான் உள்பட 6 பேர் கொண்ட கும்பல், காளியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தோம்.’’ என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, வெங்கி (எ) வெங்கடேஸ்வரன், சபரி (எ) சபரேசன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மறைமலைநகரில் தொடர்ந்து வன்னியர்கள் கொலை செய்யப்பட்டு வருவதாகவும், சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டதாக குற்றம் சாட்டியதோடு, மறைமலைநகர் காவல்நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை கண்டித்து, தேசிய நெடுஞ்சாலையில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

The post பாமக பிரமுகர் கொலை வழக்கு அனைத்து பிரச்னைகளிலும் தலையிட்டதால் தீர்த்து கட்டினோம்: குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Bamaka Pramukhar ,Chengalpattu ,Ninnagatur ,Bamakha ,Kali ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை