
சென்னை: ஜெயலலிதா பற்றிய கருத்தில் உண்மையை தான் கூறினேன். கூட்டணி தர்மம் பற்றி எனக்கு பாடம் நடத்த தேவையில்லை என்று அதிமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. 1991-96ம் ஆண்டுதான் மோசமான ஆட்சிக்காலம், ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ‘அண்ணாமலையை கட்டுச் சோற்று பெருச்சாளி’ என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பாஜக மாநில நிர்வாகி கரு.நாகராஜன் கண்டனம் தெரிவித்திருந்தார். அண்ணாமாலையின் வலதுகரமாக விளங்கும் அமர்பிரசாத் ரெட்டியோ ஒரு படி மேலே சென்று மெயின்ரோட்டுக்கு வாம்மா என்று பெண்ணை அழைத்தவர் எல்லாம் எங்களை குற்றம்சொல்லக்கூடாது என்று பதிலடி கொடுத்தார். இதனால் ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எனக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக அறிகிறேன். அது மட்டும் அல்லாது நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலை, முன்னாள் தமிழக அமைச்சர்கள் சிலர் நான் ஆங்கில நாளேடுக்கு கொடுத்த பேட்டியை சரிவர புரிந்து கொள்ளாமல் எனக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அவர்களைப் போல் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை.
ஆனால் அவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழக பாஜ சகோதர சகோதரிகளுக்கும் சிலவற்றைத் தெளிவுபடுத்துவது எனது கடமையாக உணர்கிறேன். தமிழகத்தில் ஊழல்தான் முக்கியப் பிரச்னை. இத்தனை ஆண்டு காலம் ஒவ்வொரு குடிமக்களையும் சென்று சேர வேண்டிய நலத் திட்டங்கள், அரசியல்வாதிகளால் சுரண்டப்பட்டு, இறுதியில் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்று சேர்ந்ததே இல்லை. தேர்தல் வாக்குறுதிகளில் இலவசமும், தேர்தலின்போது பணமும் கொடுத்தால் போதும், அடுத்த ஐந்து ஆண்டுகளும் இந்த மக்களைச் சூறையாடலாம் என்ற எண்ணத்திலேயே ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள்.
ஏழை எளிய மக்களை எப்போதும் கையேந்தி நிற்கும் நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். இந்த வகையான அரசியலை நான் வெறுக்கிறேன். ஊழலின் தலைநகரம் தமிழகம் என்ற போக்கினை மாற்றி ஊழலற்ற நல்லாட்சி வழங்கிட வேண்டும். கூட்டணிக் கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி தர்மம் நன்கு உணர்ந்தவன் நான். தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதைக் கூறியிருக்கிறேன். அதே சமயம், கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது.
எனது மனசாட்சிப்படிதான் இங்கு அரசியல் செய்ய வந்துள்ளேன். குறுகிய கால லாப நோக்கங்களுக்காக, இன்றும் நாளையும் கிடைக்கும் தற்காலிக வெற்றிகளுக்காக, தமிழகத்தின் எதிர்காலம் குறித்த எனது கனவுகளை, கொள்கையை அடமானம் வைக்க எனக்கு விருப்பமில்லை. தமிழக அரசியலில் மலிந்திருக்கும் ஊழல், தமிழகத்திற்குக் கொண்டு வந்த மாபெரும் இழிவு, வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அவல நிலை இது. அடிமட்டம் வரை ஊழலில் ஊறிப்போய் இருக்கும் இந்த அரசியல் போக்கைத்தான் மாற்ற விரும்புகிறேன். தமிழகத்தில் ஊழலற்ற, மக்கள் நலன் ஒன்றே சார்ந்த அரசு அமையும். அதை நோக்கியே எங்கள் அரசியல் பயணமும் தொடரும். ஏழை எளிய மக்களின் குரலாக என் குரல் என்றும் ஒலிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* தனி அணியா?
அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், ஜெயலலிதா மோசமான ஊழல் முதல்வர் என்று குற்றம்சாட்டும் அண்ணாமலை, தமிழகத்தில் விரைவில் ஊழல் அற்ற அரசு அமையும் என்று கூறியிருப்பதன் மூலம் தனி அணியாக மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதையே காட்டுவதாக அதிமுக தலைவர்கள் கருதுகின்றனர். இதனால்தான் அவர் அதிமுக மீதும், ஜெயலலிதா மீதும் தாக்குதல் தொடுத்துள்ளார். ஏன் அமித்ஷா சென்னையில் இருக்கும்போதே அண்ணாமலை பேட்டி கொடுத்துள்ளதால், அவரது ஆதரவுடன்தான் கொடுத்திருக்கலாம் என்றும் அதிமுக தலைவர்கள் கருதுகின்றனர்.
The post கூட்டணி தர்மம் பற்றி எனக்கு பாடம் நடத்த வேண்டாம் ஜெயலலிதா பற்றி உண்மையை தான் கூறினேன்: அதிமுகவுக்கு பாஜ தலைவர் அண்ணாமலை பதிலடி appeared first on Dinakaran.