×

காரமடை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக தர்ணா

மேட்டுப்பாளையம்: காரமடை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை நகராட்சியில் மொத்தமாக 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினசரி சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்க நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் 38 பேர் மற்றும் சுயஉதவி குழுக்கள் மூலம் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 137 பேர் என மொத்தமாக 175 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் காரமடை பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் கூடுதலாக தூய்மை பணியாளர்கள் நகராட்சிக்காக எடுக்கப்பட்டனர்.

தற்போது நகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு நகராட்சி மூலம் கடந்த மாதம் ஒப்பந்தம் விடப்பட்டது. தற்போது ஒப்பந்ததாரர் மூலமாக ரூ.507 கூலியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பிஎப், இஎஸ்ஐ பிடித்தம் போக பணியாளருக்கு ரூ.392 கிடைக்கும். இந்த நிலையில் தங்களுக்கு கலெக்டர் நிர்ணயித்த ரூ.606 சம்பளமாக வழங்க வேண்டும் என ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நகர்மன்ற கூட்டத்தின் முடிவில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை அழைத்து 8 மணி நேர வேலை, ஆட்குறைப்பு செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். உரிய ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கலெக்டர் நிர்ணயித்த ரூ.606 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காரமடை நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை முதல் பாஜ கவுன்சிலர் விக்னேஷ் தலைமையில் முற்றுகையிட்டு திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கனகராஜ், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, உள்ளாட்சி ஊழியர் சங்கப்பொதுச்செயலாளர் ரத்தினகுமார், இன்ஜினியரிங் சங்க பொருளாளர் சுப்ரமணியம், அதிமுக கவுன்சிலர் வனிதா சஞ்ஜீவ் காந்தி உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களுடன் காரமடை நகராட்சி ஆணையர் பால்ராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டனர். இதனிடையே மாவட்ட கலெக்டருடன் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கவுன்சிலர்கள் கூறியதை அடுத்து நேற்றிரவு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து தங்களது பிரச்னைக்கு தீர்வு காணும் வரை தங்களது போராட்டம் தொடரும் என கூறி காரமடை நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடர்ந்து 2 வது நாளாக இன்று காலை முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் பால்ராஜ் கூறுகையில், ‘‘நகராட்சி சட்ட விதிகளின்படி ஒப்பந்ததாரர் மூலமாக ரூ.392 மட்டுமே வழங்கப்படும். இது நகராட்சியின் அரசாணையாகும். ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களின் போராட்டம் குறித்து
அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’’ என்றார்.

The post காரமடை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக தர்ணா appeared first on Dinakaran.

Tags : Dharna ,Karamada Municipal Office ,Madtupalayam ,Mattupalayam ,Tarna ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா