×

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் தனியார் இடத்தில் மின் தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்: போலீசாருடன் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள தபால் தெரு, மேட்டு தெரு, கும்மிடிப்பூண்டி பஜார், திருவள்ளூர் நகர், சரண்யா நகர், ம.பொ.சி, தெரு, கங்கன் தொட்டி, கோரிமேடு, மேட்டு காலனி, வெட்டுகாலனி, கோட்டக்கரை பல்வேறு பகுதிகளில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்தந்த பகுதிகளுக்கு தனித்தனியாக சுடுகாடு உள்ளது. ஆனால் தபால் தெரு, மேட்டு தெரு உள்ளிட்ட 10 வகையறாக்களை சேர்ந்த 350 குடும்பத்தினர் அவர்களுக்கு சொந்தமான 55 சென்ட் நிலத்தை சுடுகாடாக கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சுடுகாட்டை மின் மயான பொது சுடுகாடாக மாற்ற கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா, தலைவர் ஷகிலா அறிவழகன், கவுன்சிலர்கள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனிடையே கடந்த மாதம் 4 முறை மின்மயான பணியை துவக்க அதிகாரிகள் வந்தபோது மக்கள் போராட்டம் காரணமாக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மேற்கண்ட பகுதியில் மின் மயான பணிகளை தொடங்க வேண்டும் என்று போலீஸ் பாதுகாப்பு கேட்டு அதிகாரிகள் மனு கொடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து டிஎஸ்பி கிரியாசக்தி, இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் ஆகியோரின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார், ஜெயஸ்ரீ நகரில் உள்ள சுடுகாட்டுக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மின்மயானம் அமைக்கும் பணிகளை தொடங்கினர். இதுபற்றி அறிந்ததும் ஊர் பொதுமக்கள் திரண்டுவந்து தாசில்தார் பிரீத்தி, பேரூராட்சி செயல் அலுவலர் யமுனாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்கள், ‘’எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய இந்த சுடுகாட்டை பொது சுடுகாடாக மாற்றக்கூடாது. அதற்கான இடம் கும்மிடிப்பூண்டி பஜார் ரெட்டம்பேடு சாலையில் உள்ள பாப்பான்குளம் பகுதியில் உள்ளது. எனவே, அந்த இடத்தில் பணிகளை செய்ய வேண்டும். இதுசம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது’ என்றனர். அதற்கு அதிகாரிகள், ‘’மின் மயான பயணிகள் இங்குதான் நடைபெறும்’’ என்று கூறிவிட்டு சென்றனர். இதையடுத்து கிராம மக்கள் திரண்டுவந்து ஜிஎன்டி சாலையில் மறியல் செய்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. அப்போது போலீசார் வந்து சமாதானப்படுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் மேலும் பரபரப்பு நிலவியது.

The post கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் தனியார் இடத்தில் மின் தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்: போலீசாருடன் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi Municipality ,Push Kummidipoondi ,Postal Street ,Mettu Street ,Kummidipoondi Bazaar ,Tiruvallur Nagar ,Saranya ,Kummidipoondi ,Tiruvallur district ,Tollumullu ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டியில்  கன்னிகா...