×

தனி நபர் துதி பாடுவதை நிறுத்துங்கப்பா… அணியின் நலனே முக்கியம் என்று கருதினால் கோப்பையை வெல்லலாம்: கம்பீர் காட்டம்

புது டெல்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு நேரடியாக டெஸ்ட் போட்டிக்கு திரும்பியது, பிளேயிங் லெவனில் இருந்து அஸ்வினை நீக்கியது, எந்த வீரரும் எந்த திட்டத்துடனும் களமிறங்காதது என்று இந்திய அணியின் தோல்விக்கு மலை போல் காரணங்கள் குவிந்து வருகின்றன. தோல்விக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என்று ரோகித் சர்மா சொன்னதற்கு கூட, ஒலிம்பிக் போட்டியிலேயே வெற்றியாளரை ஒரே போட்டியில் முடிவு செய்து பதக்கம் கொடுக்கிறார்கள் என்று கம்மின்ஸ் பதிலடி கொடுத்தார். இதனால் களத்தில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியேவும் இந்திய அணி அவமானப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியதாவது: 1983 உலகக்கோப்பை வெற்றி என்று எடுத்துக் கொண்டால் கபில்தேவ் கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் மட்டுமே காட்டப்படுகிறது. ஆனால் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அமர்நாத் ஆட்டநாயகன் விருது வென்றதை எவ்வளவு பேர் அறிந்து வைத்துள்ளார்கள். நமது நாட்டில் தான் அணியின் வெற்றியை கொண்டாடுவோரை விடவும், தனி வீரர்களின் வெற்றியை கொண்டாடுவோர் அதிகம் இருக்கிறார்கள்.

அதேபோல் தான் அணியை விடவும் வீரர்களை பெரிதாக எண்ணிவிடுகிறோம். ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வீரர்களை விடவும் அணியின் நலனே முக்கியம் என்று முடிவுகள் எடுக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அப்படியல்ல. எப்போது இந்தியாவிலும் வீரர்களின் வெற்றியை விடவும் அணியின் நலனே முக்கியம் என்று முடிவுகள் எடுக்கப்படுகிறதோ அப்போது தான் கோப்பையை வெல்ல முடியும். இவ்வாறு கம்பீர் காட்டமாக கூறினார்.

The post தனி நபர் துதி பாடுவதை நிறுத்துங்கப்பா… அணியின் நலனே முக்கியம் என்று கருதினால் கோப்பையை வெல்லலாம்: கம்பீர் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Gambhir Kattam ,New Delhi ,World Test Championship ,Indian ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...