×

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தோல்வி எதிரொலி; வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஜெய்ஸ்வால் ரிங்குசிங், ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு: புஜாரா, உமேஷ்யாதவை கழற்றிவிட பிசிசிஐ திட்டம்

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி நிர்வாகத்தையும், சீனியர் வீரர்களையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தோல்வியை மறக்கடிக்க, பிசிசிஐ ஒரு விசேஷ ஏற்பாட்டை செய்துள்ளது. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்து தற்போது வாழ்ந்து கெட்ட அணியாக விளங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு நெடுந்தொடரை நடத்துவதுதான் அது. இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் இழந்த பெருமையை மீட்பார்கள். அதற்காக தான் தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு வரும் ஜூலை 12ம் தேதி இந்திய அணி சுற்றுப்பயணம்
மேற்கொள்கிறது. அங்கு இந்திய அணி, 2 டெஸ்ட் 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் விளையாடுகிறது.

ஜூலை 12ம் தேதி முதல் டெஸ்ட், ஜூலை 20ம் தேதி 2வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இதைத்தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி ஜூலை 27ம் தேதியிலும், 2வது ஒருநாள் போட்டி ஜூலை 29ம் தேதி, 3வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 1ம்தேதியிலும் விளையாடுகிறது. இந்தத் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதன் பிறகு முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 3ம் தேதியும் 2வது டி20 ஆகஸ்ட் 6ஆம் தேதி, 3வது டி20 போட்டி ஆகஸ்ட் 8ம் தேதி, கடைசி 2 டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆகஸ்ட் 12 மற்றும் 13ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த 3 தொடர்களிலும், அதிகளவு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

குறிப்பாக டி20 தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி அடைந்துள்ள படுதோல்வி ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் அடுத்ததாக இந்திய அணி பங்கேற்க உள்ள அனைத்து தொடர்களிலும் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும் என்றும் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஐசிசி தொடர்களை வெல்லக் கூடிய அணியை உருவாக்கும் வகையில் நடவடிக்கையை பிசிசிஐ தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதனால் அவர்களின் இடத்திற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் ரஞ்சி டிராபி தொடரிலும் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருபவர்கள். குறிப்பாக முகேஷ் குமார் பெங்கால் அணிக்காக பல்வேறு போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். இதன் காரணமாகவே டெல்லி அணியால் முகேஷ் குமாருக்கு பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்டார்.

அதேபோல் டி20 கிரிக்கெட் தொடரில் இஷான் கிஷன், ராகுல் திரிபாதி உள்ளிட்டோர் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இருவருமே சீரற்ற முறையில் பேட்டிங் ஆடி வருகின்றனர். இதனால் மற்றொரு இடதுகை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவரது இடத்தில் விளையாட வாய்ப்புகள் உள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறக்கப்பட்டால் விக்கெட் கீப்பராக நிச்சயம் ஜித்தேஷ் சர்மா களமிறங்கியே ஆக வேண்டும். ஏனென்றால் இஷான் கிஷன் மட்டுமே விக்கெட் கீப்பராக இருக்கிறார்.

அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங் ஆகியோரையும் டி20 கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ தேர்வு குழு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேப்டன் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கில்லுடன் ஓபனராக களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்து, படிப்படியாக கோஹ்லி, புஜாரா போன்றவர்களை ஓரங்கட்டிவிட்டு, அவர்களுக்கு மாற்றாக இளம் வீரர்களை கொண்டு வரவும் பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

The post உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தோல்வி எதிரொலி; வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஜெய்ஸ்வால் ரிங்குசிங், ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு: புஜாரா, உமேஷ்யாதவை கழற்றிவிட பிசிசிஐ திட்டம் appeared first on Dinakaran.

Tags : World Test Championship ,Jaiswal Ringu Singh ,Jitesh Sharma ,West ,Indies ,BCCI ,Pujara ,Umesh Yadav ,Mumbai ,Umeshyadava ,Dinakaran ,
× RELATED மெல்ல மெல்ல திரும்புகிறது உடல் தகுதி;...