×

ங போல் வளை-யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

வேண்டுதலை வைக்க வேண்டிய சந்நிதி!

நம் அனைவருக்கும் இருக்கும் நல்ல அம்சங்களில் ஒன்று, மனதுக்குள் ஒன்றை நினைத்து வேண்டிக்கொள்ளுதல் அல்லது உறுதிமொழி செய்துகொள்ளுதல்.

உதாரணமாக, சோம்பல், புகைப்பழக்கம், கோபம் போன்ற எதிர்மறை அம்சங்களை நம்மிலிருந்து நீக்கிவிட வேண்டுமெனத் தொடர்ந்து விழைகிறோம், மனதுக்குள் அதற்காக உறுதிமொழி செய்துகொள்கிறோம், வேண்டிக்கொள்கிறோம். நமது பிறந்தநாள், புத்தாண்டு போன்ற பிரத்யேகமான தினங்களில் ‘இதைச் செய்வேன்’ என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு அதற்கான செயல் அல்லது முயற்சி ஒன்றைத் தொடங்குகிறோம். அப்படி நாம் செய்துகொள்ளும் உறுதிமொழிக்கு ‘சங்கல்பம் ‘என்று பெயர்.

இங்கு நாம் காணும் பெரும்சாதனைகள் அனைத்துமே, யாரோ ஒருவருடைய சங்கல்பமாகவே இருந்திருக்கிறது. இந்த தேசத்தின் விடுதலை என்பது மகாத்மாவின் சங்கல்பம். மாபெரும் கட்டுமானங்கள் என்பது கட்டிட பொறியாளர்களின் சங்கல்பம். ஆரோக்கியமான குழந்தை என்பது பெற்றோரின் சங்கல்பம். இங்கே வளமும் நேர்மறை அம்சமும் நிறைந்த வெற்றிகரமான செயல்கள் அனைத்துமே ஒவ்வொருவரின் உறுதி மொழியால் நிகழ்ந்தவை.

எனினும், மேலே சொன்ன எதிர்மறை அம்சமான புகை, குடிப்பழக்கம், சோம்பல், கோபம் போன்றவற்றை நம்மால் வெற்றிகரமாக மாற்றி அமைக்க முடிவதில்லை என்பதும் உண்மை.புகைப்பழக்கத்தை விட்டுவிடுவேன் என பிறந்தநாள் அன்று நாம் செய்து கொள்ளும் உறுதிமொழி அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் மறந்துவிடுகிறது. மீண்டும் அதே புகைப் பழக்கம் தொடங்குகிறது.

இது ஏன் நிகழ்கிறது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானதும் முக்கியமானதுமான காரணம், நம்முடைய உறுதிமொழியை நாம் எங்கே? எவ்விதம் விதைத்தோம் என்பதே. ஏனெனில் நாம் நமக்குள்ளாகவே பல்வேறு கிளைகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு உயிர். உடல் மொழியைவிட உள்ளத்தின் மொழி ஆழமானது. உள்ளத்தின் மொழியைவிட ஆழ்மனதின் மொழி ஆழமானது. ஆழ்மனதைவிட நம்மில் நிகழும் ஆன்மா ஆழமானது. நாம் அனைவரும் இப்படிப் பல அடுக்குகள் கொண்டவர்கள்.

ஆகவே, நாம் ஒரு உறுதிமொழியை உடலளவிலோ, உள்ளத்தளவிலோ செய்துகொள்வதென்பது, மிகவும் பலவீனமானதாகவே இருக்க முடியும். உதாரணமாக, நமது நுகர்வு நம்மை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பதற்கு, நாம் அடிக்கடி விரும்பி உண்ணும் உணவின் மீது நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. இப்படியே உடை, பொருட்கள், உறவுகள் எனப் பலவற்றை சொல்லலாம், இவையனைத்தும், நாம் நம் உடல் மற்றும் உள்ளத்தால் கட்டுண்டு கிடைப்பதைக் காட்டும் கண்ணாடிகள். இதற்காகத் தன்னிரக்கமோ, அசூயையோ கொள்ளத்தேவையில்லை. மாறாக, இவற்றில் நிச்சயம் மாற்றி அமைத்தே ஆகவேண்டும் என்பவற்றை அடையாளம் கண்டுகொள்வதும், நேர்மறையான ஒன்றைத் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் செய்யவேண்டியதைச் செய்வதற்கான உறுதிமொழியை செய்து கொள்வதுமே நமது முக்கியத் தேவை.

ஆகவே, அவ்வகை சங்கல்பத்தை மேலோட்டமான, நொய்மையான, பலவீனங்கள் மிகுந்த உடல் மற்றும் மனதளவில் விதைக்காமல் ஆழ்மனம் எனும் நிலைக்குச் சென்று விதைக்க வேண்டியுள்ளது.நமது ஆழ்மனம் இயங்கும் நிலையை, யோக மரபு விஞ்ஞான மயகோஸம் என்கிறது. இங்குதான் நம் சித்தம் கூர்கொள்கிறது. ஒருவர் தன் வாழ்வில் சாதிக்க விரும்பும் சாத்தியங்களை, சித்தத்தில் விதைக்க வேண்டும். அதுவும் நேர்மறையான சொற்களாக, உறுதிமொழியாகவே இருக்க வேண்டும். எனவே, சித்தம் நோக்கிச் செல்வதற்கு மிகச்சரியான பாடத் திட்டம் ஒன்றை வடிவமைத்து வைத்திருக்கிறது மரபார்ந்த யோகக் கல்வி.

சித்தம் எனும் தளத்துக்குச் செல்வதற்கான பயிற்சிகளை வடிவமைக்கையில், வேத மரபிலிருந்து சில முக்கியமானவற்றை எடுத்துக்கொண்டு அவற்றை இன்றைய மனிதருக்குத் தேவையான வடிவில் வழங்கியதில் மிக முக்கியமான பங்கு, சுவாமி சத்யானந்த சரஸ்வதி அவர்களுக்கே உரியது. இன்று உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் யோக நித்ரா எனும் பயிற்சியை 1960களில் கண்டுபிடித்து வடிவமைத்து கொடுத்தவர் அவர்தான்.

இந்தப் பயிற்சி பிரத்யாஹாரா எனும் கிளையின் கீழ் வருகிறது. ஆகவே, யோகமென்பது ஆசன, பிராணாயாம, தியானப் பயிற்சிகள் அல்ல. ஒரு முழுமையான யோகமென்பது, நமது அன்றாட செயல்பாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஏதேனும் வகையில் மேன்மையடைய உதவிபுரிவதாக இருக்க வேண்டும். இதையே ஸ்ரீ அரவிந்தர் பூர்ண யோகம் என்கிறார்.

சங்கல்பம் எப்படிச் செயல்படுகிறது?

ஒருவர் தனது அலுவலகத்தில் பதவி உயர்வு அடைய நினைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதை சாதிக்க அவர் கடுமையான உழைப்பை செலுத்தலாம். தன் துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொண்டு முன்னேறலாம். சில அரசியல் சரிக்கட்டுதல்களைச் செய்து, குறுக்கு வழியிலும் செல்லலாம். இப்படி பல வழிமுறைகள் உள்ளன. அனைத்து திறமைகளும் தகுதிகளும் இருந்தும் காலம் தாழ்த்தாது மிகச்சரியான தருணத்தில் இலக்கை அடைவதற்கு, அன்றாட பழக்க வழக்கங்கள், நட்பார்ந்த தன்மை, செயலூக்கம் மிக்க மனநிலை, எனப் பல்வேறு தகுதிகளை வெளிப்படுத்துவதன் மூலம் இயல்பாகவே, எந்தவிதத் தடைகளும், எதிர்மறை காய்நகர்த்தல்களும் இல்லாமலே அந்தப் பதவி உயர்வை அடைந்துவிட முடியும். மட்டுமின்றி அப்படி அடைந்த பதவி உயர்வில் மேலும் சிறப்பாக செயல்பட முடியும்.

குறுக்கு வழிகளில் சென்றவர்கள் அடைந்த பதற்றம் ஒருபோதும் சங்கல்பத்தின் வழி சென்றவர்களுக்கு நிகழாது.இப்படி சாதாரணமாக உலகியல் சார்ந்த தேவைகளுக்கு மட்டுமின்றி மனம், ஆன்மிகம், உறவுகள், உணர்ச்சிகள் என எவ்விதத் தேவைகளுக்கும் ஒருவர் சங்கல்பத்தைச் செய்து கொண்டு அதில் வெற்றியும் அடையலாம்.

இதையே சுவாமி சத்யானந்தர் கூறும்பொழுது ‘‘இந்த உலகில், உலகியலில் எது வேண்டுமானாலும் தோல்வி அடையலாம். ஆனால் நீங்கள் யோக நித்ராவின் போது எடுத்துக்கொள்ளும் சங்கல்பம் உங்கள் வாழ்வில் நிச்சயம் நடந்தே தீரும்’’ என்கிறார். சங்கல்பம் என்பது குறுகிய கால, குறைந்தபட்ச மற்றும் முக்கியமானத் தேவை கருதி செய்துகொள்வதாக இருக்கலாம் அல்லது அடுத்த ஐந்து வருடங்களில் அடையவேண்டிய இலக்கு எனும் வகையில் இருக்கலாம். வாழ்நாள் முழுவதிலும் சென்று சேர வேண்டிய அடைய வேண்டிய இலக்கு என்றும் இருக்கலாம்.

இப்படி வேண்டுதல்கள் பல்வேறு படிநிலைகள் கொண்டவை என்பதால் இதை ஒருவர் குறுகிய கால அளவில் ஒன்றை முயன்று பார்க்கலாம். அதில் அடையப்படும் வெற்றியை வைத்து சோதித்துப் பார்த்து அடுத்தகட்ட உறுதிமொழிக்குத் தன்னை தயாராக்கிக்கொள்ளலாம்.ஆகவே, மிகச் சரியான பாடத்திட்டமும் நல்லாசிரியரின் உதவியும் அமைந்தால் இவ்வகையான மரபார்ந்த, ஆற்றல்மிக்க ஒன்றை இன்றைய சாமானியரும் கற்றுத் தேர்ந்து அனைத்துத் தளங்களிலும் தன்னை மேம்படுத்திக்கொள்ளலாம்.

யோகாசனம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டியவை

நல்ல சுத்தமான காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் செய்தால் பலன் அதிகம் அல்லது 8 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். மாலையில் சூரியன் மறையும் நேரம் செய்ய வேண்டும். அதாவது 5.30 முதல் 7 மணிக்குள் செய்ய வேண்டும்.

ஆசனம் பயிற்சி தொடங்கும் முன் சிறுநீர்ப்பையும், மலக்குடலையும் காலி செய்ய வேண்டும். காலி செய்த பிறகே யோகாசனத்தை செய்ய வேன்டும்.யோகாசனத்தை வெறும் வயிற்றில் செய்வது நல்லது. இல்லையேல் யோகா செய்யும் முன் 30 நிமிடத்திற்கு முன்னால் ஒரு கப் பால் சாப்பிடலாம். மாலை வேளையில் செய்யும் போது சாப்பிட்டு நாலு அல்லது ஐந்து மணி நேரத்துக்கு பிறகு செய்வது நல்லது.

இறுக்கம் இல்லாமல் தளர்ச்சியான உடையே அணிய வேண்டும்.ஒவ்வொரு ஆசனத்திற்கும் மற்றொரு ஆசனத்திற்கும் இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு அடுத்த ஆசனத்தை தொடர வேண்டும்.உடல் நோய் இருப்பின் அந்த நோய்க்கான யோகப்பயிற்சியை அதிக முனைப்புடன் செய்யவும்.கடினமான ஆசனங்களை ஆசிரியர் உதவியுடன் செய்திடல் வேண்டும்.

செய்யக் கூடாதவை:

*அவசர அவசரமாக யோகா செய்யக்கூடாது. மிகவும் நிதானமாக செய்ய வேண்டும்.

*மது, புகை, டீ, காபி, அதிக காரம், உப்பு, புளி, அசைவம் இவற்றை தவிர்க்க வேண்டும்.

*வியர்வை வரும்படி யோகாசனம் செய்யக்கூடாது.

*தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்யக்கூடாது.

*மலச்சிக்கல் இருப்பின் மிகவும் எளிமையான ஆசனத்தை செய்ய வேண்டும்.

*முழு வயிறு உணவு உண்ட பிறகு ஆசனங்கள் செய்யகூடாது.

*பெண்கள் மாதவிலக்கு நாட்களில் ஆசனம் செய்வதை தவிர்க்கவும்.

*கருவுற்ற தாய்மார்கள் முதல் 4-5 மாதங்கள் வரை யோகா செய்யலாம். இது குழந்தைப் பேறுக்கு உதவும். குழந்தைப் பேறுக்கு பின் மூன்று மாதங்களுக்குப் பிறகு யோகா செய்யலாம்.

பத்மாசனம்

இந்தப் பகுதியில் நாம் அனைவருக்கும் தெரிந்த கேள்விப்பட்ட மிக இலகுவான ஆசனத்தை பற்றித் தெரிந்துகொள்ளலாம். யோகாசனங்களில் முதன்மையானதும், தியானத்தில் ஒருவர் அமர பரிந்துரைக்கப்படுவதுமான ‘பத்மாசனம்’ என்பதே அந்தப் பயிற்சி.இந்த நிலையில் நம் உடலின் எடை முழுவதும் தரையில் மிகச் சமமாகச் சென்று பதிந்துவிடுவதால், நீண்ட நேரம் எவ்வித களைப்போ, வலியோ, உபாதையோ இன்றி தியான மற்றும் மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபட முடியும். நீண்ட நேரம் அமர்தல் என்பது முழுமையான பலன் என்றே சொல்லப்படுகிறது.

தாமரை போன்ற மலர்ந்த நிலையில் அமரும் இந்த நிலை அமர்ந்த சில நிமிடங்களில் மனச்சலனங்களை குறைத்து, ஒருமித்த கவனக்குவித்தலை வழங்குவதில் முக்கியமான ஒன்று. பெரும்பாலான மரபுகளில், சிற்பக்கலைகளில், தியான நிலைகளில் இந்த மலரமர்தல் நிலையைக் காணமுடியும்.

The post ங போல் வளை-யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Vela Yoga ,Kumkum ,Dr. ,Yoga ,Selandararajan.ji ,
× RELATED டூர் போறீங்களா?