×

உடுமலைப்பேட்டை பகுதியில் பாளையங்களை காட்சிப்படுத்தும் பாளையக்காரர்களின் நடுகற்கள்

உடுமலை : உடுமலை பகுதியில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாளையக்காரர்கள் ஆட்சி இருந்ததும், அவர்களில் ஒருவரான தளி மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப மன்னர் என்பவர் ஆட்சி செய்ததையும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் எனும் நூல்வழியாக ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ளனர்.

அதை உறுதிப்படுத்தும் வகையின் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள் தமிழக அரசு அவருக்கு உருவச் சிலையும், சமுதாய மணி மண்டப அரங்கும் கட்டுவதற்கு ரூபாய் 2 கோடியே 62 லட்சத்தை ஒதுக்கி பணிகள் துவங்கியது.கடந்த மே 26-ம் தேதி திருமூர்த்தி மலை பொதுப்பணித்துறை பயணியர் விடுதிக்குப் பின்புறம் கால் கோள் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த தளி எத்தலப்பரின் ஆட்சிக்காலத்தில் மேற்கில் சிஞ்சுவாடி, வடக்கில் ராமேகவுண்டன்புதூர் எனும் மெட்ராத்தி, ஜோத்தம்பட்டி, வேடபட்டி, ஜமீன்தார்களும் தளி பாளையப்பட்டுகளின் எல்லைகளாக இருந்துள்ளனர்.

இந்த எல்லைகளைக் குறிக்கும் வகையில் அந்தியூருக்கும் குண்டலப்பட்டிக்கும் இடையில் எல்லைக்கல் ஒன்றினை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆவணப்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே, இந்தப்பகுதியில் மாலப்பட்டி எனும் ஊர் இருந்ததும், பிற்பாடு அது மாலகோயில் எனும் பெயரில் பொதுமக்கள் வழிபட்டு வந்ததையும் நெடுங்கற்கள் தனியார் தோட்டத்திற்குள் இருப்பதையும் கடந்த 2018-19ஆம்ஆண்டுகளில் ஆவணப்படுத்தி இருந்தனர்.

தற்போது இந்த எல்லைக்கல் எனும் நடுகல் மண்ணிற்குள் புதைந்து இருந்ததாகவும் அந்தப்பகுதி மக்கள் இதனை வெளியே எடுத்து வழிபட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. இந்த நடுகல் குறித்து அந்தப்பகுதி மக்களிடம் கேட்ட போது இது எல்லைச்சாமி எனவும், நாங்கள் எந்த காரியத்திற்காக வெளியூர் சென்றாலும், இவ்விடத்தில் நின்று வழிபாடு செய்து விட்டுத்தான் வெளியூர் செல்வதாகவும். அதே போல் ஊருக்குள் நுழையும் போது இந்த நடுகற்களை வணங்கி விட்டுத்தான் ஊருக்குள் நுழைவதாகவும் வயது முதிர்ந்த பெரியவர்கள் தெரிவித்தனர்.

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போர் நூலின் பதிப்பாசிரியர்கள் கூறும்போது, “தளி பாளையப்பட்டுக்கும், சிஞ்சுவாடி பாளையப்பட்டுக்கும் எல்லையில் இருப்பதால் இதை எல்லைச்சாமி என்றும், 5 அடி உயரமுள்ள நான்கு பட்டைகள் கொண்ட தூண் என்பதாலும் இதில் வீரர்கள் இருவரின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக இருப்பதாலும் இவர்கள் பாளையப்பட்டுகளைப் பாதுகாக்கும் எல்லை வீரர்கள் என்றும், கையில் கழல், மார்புக்கச்சை, கையில் ஆயுதம், நீர்க்குவளை வைத்திருப்பதாலும் இவர்கள் பாளையப்பட்டுகளின் வீரர்கள் என்றும் தெரிவித்தார்.

அதேபோன்று இந்த எல்லைக்கல் இருக்கும் பகுதியிலிருந்து அடுத்து கொஞ்ச தூரத்தில் குண்டலப்பட்டி, லட்சுமாபுரம் எனும் ஊர்கள் அமைந்திருப்பதும், அது பொள்ளாச்சி வட்டத்திற்குள் அமைந்திருப்பதும் பாளையப்பட்டுகளின் எல்லைகளை உறுதிப்படுத்துகின்றது.மேலும், அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை நாட்களிலும் இந்த நடுகற்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருவதாகவும், குறிப்பிட்ட ஒரு சமுதாயமக்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் இந்த நடுகற்களை வணங்கி வருவதிலிருந்து எல்லைச்சாமி எனும் பெயரில் பாளையப்பட்டு களின் பாதுகாவலான எல்லை வீரர்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது. கல்வெட்டு எழுத்துகள் சிதைந்திருப்பதால் தெளிவாக எழுத்துகள் தெரியவில்லை. இந்தக் கள ஆய்வுப் பணியை பொறியாளர் ராஜ்சுந்தரம் மற்றும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் மேற்கொண்டனர்.

The post உடுமலைப்பேட்டை பகுதியில் பாளையங்களை காட்சிப்படுத்தும் பாளையக்காரர்களின் நடுகற்கள் appeared first on Dinakaran.

Tags : Udumalaipet ,Udumalai ,Udumalayan ,Balayans ,Dinakaran ,
× RELATED இலவச தடகள பயிற்சி முகாம்