×

கிராமங்களில் குடிநீர் உப்பு நீராக மாறி வரும் அவலம் கடல் நீர் உட்புகுவதை தடுக்க வெள்ளாற்றில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும்

*பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை

புவனகிரி : சேத்தியாத்தோப்பு, புவனகிரி, முட்லூர் வழியாக ஓடுவது வெள்ளாறு. இந்த ஆற்றின் இரு புறங்களிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்து மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக வெள்ளாறு விளங்குகிறது. பல கிராமங்கள் வழியாக பயணித்து இறுதியில் பரங்கிப்பேட்டையில் கடலில் கலக்கிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கடல் நீர் வெள்ளாற்றின் வழியாக உட்புகுந்தால் நீர்வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது.

அதனால் வெள்ளாற்றில் தண்ணீர் உப்பு நீராக மாறி கிராம மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பரங்கிப்பேட்டை, புவனகிரி பகுதிகளில் உள்ள கீழ்புவனகிரி, பு.ஆதிவராகநல்லூர், தம்பிக்கு நல்லான்பட்டினம், அகரம், அரியகோஷ்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் தண்ணீர் உப்பாக மாறி விட்டது.இதுபோல் வெள்ளாற்றின் மற்றொரு கரையில் உள்ள கீரப்பாளையம், வடஹரிராஜபுரம், சாக்காங்குடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் தண்ணீர் உப்பு நீராக மாறிவிட்டது. நிலத்தடி நீர் உப்பாக மாறியதால் கிராமங்களில் உள்ள குடிநீர் தொட்டிகளும், மின் மோட்டார்களும் அடிக்கடி பழுதாகி விடுகிறது.

கிராமங்களில் குடிநீர் உப்பாக மாறியதால் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும், நோய்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இதை தடுப்பதற்காக புவனகிரி அருகே உள்ள பு.ஆதிவராகநல்லூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் எழுப்பி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான வரைவு திட்டமும் தயாரிக்கப்பட்டது.

ஆதிவராகநல்லூர் கிராமத்தில் கரையோரத்தில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்கும், தடுப்புச்சுவர் கட்டும் பணிகளுக்காகவும் தனித்தனியே திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.இந்த திட்டத்திற்கு உரிய அனுமதி வழங்கப்படாததாலும், நிதி ஒதுக்கப்படாததாலும் இந்த திட்டம் கானல் நீராகவே இருக்கிறது. சிதம்பரம், புவனகிரி ஆகிய 2 தாலுகா மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெள்ளாற்றில் உப்பு நீர் உட்புகாமல் தடுப்பதற்கு தடுப்புச்சுவர் மிக முக்கியமான ஒன்றாகும்.

தடுப்புச்சுவரை கட்டுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்புச்சுவர் கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என 2 தாலுகா கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கிராமங்களில் குடிநீர் உப்பு நீராக மாறி வரும் அவலம் கடல் நீர் உட்புகுவதை தடுக்க வெள்ளாற்றில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Vella River ,Bhubanagiri ,Velara ,Setiyathoppu ,Mudlur ,Dinakaran ,
× RELATED ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த...