×

போளூர் அருகே கோயில் வளாகத்தில் மதுகுடிப்பதை தட்டிக்கேட்டவர் மீது துப்பாக்கி சூடு

*வாலிபர் நாட்டுத்துப்பாக்கியுடன் கைது

போளூர் : போளூர் அருகே கோயில் வளாகத்தில் மது குடிப்பதை தட்டிக்கேட்டவர் மீது துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் கைது செய்து, நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பெரியகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் லட்சுமணன்(22), திருமணம் ஆகவில்லை.

கடந்த 10ம் தேதி இரவு அங்குள்ள கோயில் வளாகத்தில் உள்ள நாடக மேடையில் அமர்ந்து லட்சுமணனும் அவரது நண்பர் சுப்பிரமணியும் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். கோயில் நாடக மேடையில் மது அருந்துவதை அறிந்த அதே ஊரை சேர்ந்த சிலர் அவரை தட்டி கேட்டுள்ளனர். ஆனால் அனைவரையும் லட்சுமணன் திட்டி அனுப்பி உள்ளார்.அப்போது, அதே ஊரை சேர்ந்த சுதாகர்(25), அவரது நண்பர் பாபு ஆகியோர் நேரில் சென்று லட்சுமணனை அடித்து கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறும்படி கூறி உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன், ‘என்னையே வெளியே போக சொல்றீங்களா? நான் யார் தெரியுமா என கேட்டபடி தனது வீட்டுக்கு ஓடி சென்று அங்கு மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து வந்து சுதாகரை நோக்கி சுட்டுள்ளார். அப்போது குறி தவறி கோயில் சுவற்றின் மீது குண்டுகள் பட்டு தெரித்துள்ளது. இதையடுத்து சுதாகர் துப்பாக்கியை பிடித்து இழுத்தபோது அதன் ஒரு பகுதி உடைந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மடக்கி பிடிக்க முயன்றபோது லட்சுமணன் நாட்டுத்துப்பாக்கியுடன் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து போளூர் போலீசில் சுதாகர் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் டிஎஸ்பி கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பூங்கொல்லைமேடு கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பதுங்கியிருந்த லட்சுமணனை கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மது குடிப்பதை தட்டிக்கேட்டவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வனவிலங்குகள் வேட்டை

நாட்டுத்துப்பாக்கியுடன் கைதான லட்சுமணனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மூலக்காடு பகுதியில் நாட்டுத்துப்பாக்கியை விலைக்கு வாங்கியதும், அதனை வைத்து அருகிலுள்ள காட்டுக்குள் சென்று வனவிலங்குகளை வேட்டையாடியதும் தெரியவந்துள்ளது.

The post போளூர் அருகே கோயில் வளாகத்தில் மதுகுடிப்பதை தட்டிக்கேட்டவர் மீது துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.

Tags : Bolur ,Volyber ,Polur ,Dinakaran ,
× RELATED போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 40...