×

கே.வி.குப்பம் வாரச்சந்தையில் நெல்லூர் ஆடு ₹85 ஆயிரத்துக்கு விற்பனை-வியாபாரிகள் மகிழ்ச்சி

கே.வி.குப்பம் : கே.வி.குப்பத்தில் வாரச்சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. இதில், நெல்லூர் ஜீடிப்பி ரக ஆடு ஒன்று ₹85 ஆயிரத்துக்கு விற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் திங்கட்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை ஆட்டுச்சந்தை கூடியது.
இதில், கே.வி.குப்பம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள், ஆந்திர மாநிலம் நெல்லூர்,‌ குண்டூர், சைனகுண்டா, பலமனேர், மதனபல்லி, சித்தூர் ஆகிய பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

கோடைகாலம் என்பதால் ஆடுகள் விற்பனை அதிகாலை முதலே தொடங்கியது. இந்த சந்தையில் மயிலம்பாடி நாட்டு ரக குட்டிகள், செம்மறி ஆடுகள், நெல்லூர் ஜீடிப்பி ரக ஆடுகள், வெள்ளாடுகள் என பல்வேறு ரகங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

இதில் மயிலம்பாடி நாட்டு ரக குட்டிகள் ஜோடி ₹30 ஆயிரம் வரையிலும், செம்மறி ஆடுகள் ஜோடி ₹25 ஆயிரம் வரையிலும், நெல்லூர் ஜீடிப்பி ரக ஆடுகள் ₹50 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆனது. இவற்றில் நெல்லூர் ஜீடிப்பி ரக ஆடு ஒன்று ₹85 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ரக ஆட்டின் இறைச்சி ருசியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்ரித் பண்டிகை நெருங்குவதால் அடுத்த வாரம் ஆடுகளின் விலை அதிகரிக்கும். இதனால் ஆட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டும் என்று வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

The post கே.வி.குப்பம் வாரச்சந்தையில் நெல்லூர் ஆடு ₹85 ஆயிரத்துக்கு விற்பனை-வியாபாரிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kubbam ,Nellore ,Dinakaran ,
× RELATED திருக்கோவிலூர், நெல்லூரில் பயங்கரம்: இரு விபத்துகளில் 6 பேர் பலி