×

ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்ககோரி மனுக்களை மூட்டையில் சுமந்து வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருச்சி, ஜூன் 13: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, அரசின் நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 302 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

குறைதீர் கூட்டத்தில், டிஆர்ஓ அபிராமி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் செல்வம், உதவி ஆணையர் (கலால்) ரெங்கசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஏழுமலை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமாகா (மூப்பனார் பிரிவு) திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரவி அளித்த மனுவில், கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வணிக தொழில் நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது வேதனைக்குரியது. எனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமாகா இளைஞரணி தலைவர்கள் தனசேகர், ராஜிவ்காந்தி, ரகுராமன் ஆகியோர் அளித்த மனுவில், போதை பொருட்களால் உடல்நலம், மனநலம், குடும்ப நலம், கலாசாரம், கல்வி சீரழிவதுடன் சட்டம் ஒழுங்கு கெட்டு போகிறது. எனவே போதை பொருட்களால் ஏற்படும் சீர்கேடு குறித்து அரசு புள்ளி விவரங்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும். போதை பொருட்களின் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க கையெழுத்து இயக்க நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் நூர்ஜகான் அளித்த மனுவில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் வலியுறுத்தப்பட்டது. ஜி.கே.மூப்பனார் நகர்நல சங்க தலைவர் சமூக ஆர்வலர் செல்லதுரை அளித்த மனுவில், ‘திருவெறும்பூர் அருகே சோளகம்பட்டி ரயில் நிலையம் எதிரில் உள்ள தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் தரிசு நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் விலைக்கு வாங்கி 800 ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக செல்லதுரை ஏற்கனவே அளித்த மனுக்களை மூட்டையாக கட்டி, தாம்பளத்தில் வைத்து தலையில் சுமந்து வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி, தற்போது அளிக்கும் மனுவை மட்டும் எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர்.

The post ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்ககோரி மனுக்களை மூட்டையில் சுமந்து வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Adi Dravidians ,Trichy ,Trichy Collector ,Collector ,Pradeep Kumar ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள்,...