×

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அறங்காவலர்கள் பதவி ஏற்பு: எம்.எல்.ஏ. பங்கேற்பு

திருவள்ளூர்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்களைத் தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்து பரிந்துரைப்பதற்கு ஏதுவாக திருவள்ளூர் மாவட்ட அளவிலான 5 அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமனம் செய்து அரசு கடந்த மே 30 – ந் தேதி ஆணையிட்டது.

அதன்படி திருத்தணி, ஜோதி சாமி தெரு எம்.சி.வெங்கடேஸ்வரபாபு என்பவரை குழுவின் தலைவராகவும், கும்மிடிப்பூண்டி வட்டம், ஈகுவார் பாளையம், பெருமாள் கோயில் தெரு டி.லட்சுமி நாராயணன், மணவாளநகர், துரைக்கண்ணன் தெரு க.வெங்கடேஷ், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கோ.கார்த்திகேயன், ஆர்.கே.பேட்டை, பாலபுரம் ஆர்.மேனகா ஆகியோரை குழு உறுப்பினர்களாகவும் நியமித்து அரசு ஆணை வெளியிடப்பட்டது. இக்குழுவின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும்.

இந்நிலையில் திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ சுவாமி திருக்கோயில் கூட்டரங்கத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் (வேலூர்) க.ரமணி முன்னிலையில் திருவள்ளூர் உதவி ஆணையர் கே.சித்ரா தேவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் 4 அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பூபதி, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், பூந்தமல்லி ஒன்றிய குழு பெருந்தலைவர் எம்.ஜெயக்குமார், ஒன்றிய, நகர செயலாளர்கள் எஸ்.மகாலிங்கம், சி.ஜெ.சீனிவாசன், ஆரத்தி ரவி, பழனி, கிருஷ்ணன், வினோத்குமார் மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் திருக்கோயில் செயல் அலுவலர்கள் செந்தில்குமார் சரவணன், பிரபாகர், ஆய்வாளர்கள் கலைவாணன், நிர்மலா, உஷா, ஸ்ரீ வீரராகவர் திருகோயில் மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எம்.சி.வெங்கடேஸ்வர பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் 1010 கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 10 லட்சத்திற்கும் கீழே வருமானம் உள்ள கோயில்களை கண்டறிந்து. அதில் தகுதி வாய்ந்த கோயில்களில் மட்டும் அறங்காவலர்களை நியமிக்கப்பட உள்ளனர்.

மேலும் அதற்கு 25 வயது பூர்த்தி அடைந்து இந்து மதத்தை மதிப்பவராகவும் நன் மதிப்பு பெற்றவராகவும் திருக்கோயில் நலனில் அக்கறை கொண்டவராகவும் இருப்பவர் அறங்காவல் குழு தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் கண்டறியப்பட்டால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் துணையுடன் சட்ட ரீதியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அறங்காவலர்கள் பதவி ஏற்பு: எம்.எல்.ஏ. பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Department of Hindu Religious Charitable Trusts ,District Board of Trustees ,Tiruvallur ,Hindu Religious Charities Department ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...