×

துரைப்பாக்கத்தில் நடந்த கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்: அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் உடன்பாடு

துரைப்பாக்கம்: அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து துரைப்பாக்கத்தில் நடந்த கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை அடுத்த ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி கிடையாது. இதனால், இப்பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு, தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் சேரும் கழிவுநீரை ரூ.750 முதல் ரூ.1,500 வரை கட்டணம் செலுத்தி லாரிகள் மூலம் அகற்றி வருகின்றனர்.

இப்படி லாரிகள் மூலம் அகற்றப்படும் கழிவுநீரை பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் லாரி ஒன்றுக்கு ரூ.150 கட்டணம் செலுத்தி கொட்டி வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் வாரியம் டோல் ப்ரீ எண் முறையை நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிப்பதாக தகவல் வந்ததையடுத்து, கடந்த 10ம் தேதி முதல் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் குடிநீர் வாரிய நிர்வாகத்தை கண்டித்து துரைப்பாக்கம் 200 அடி சாலையில் லாரிகளை நிறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று குடிநீர்வாரிய அதிகாரிகளுடன் சிந்தாதிரிபேட்டையில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பழை முறையையே கழிவுநீர் உரிமையாளர்கள் பின்பற்றலாம் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

The post துரைப்பாக்கத்தில் நடந்த கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்: அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் உடன்பாடு appeared first on Dinakaran.

Tags : Duraipakgam ,Duraipakkam ,Dinakaran ,
× RELATED கொளத்தூர் மற்றும் துரைப்பாக்கத்தில் மழை..!!