×

நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் 10 ஆண்டுகளாக சீரமைக்காததால் குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் பேருந்து நிலையத்தை சுற்று கடந்த 10 ஆண்டுகளாக சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் பல கோடி ரூபாய் நிதி ஆதாரம் இருந்தும் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளை நகராட்சி நிர்வாகம் சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இது தொடர்பாக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் உள்ளது. இதனை சுற்றி போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம், அம்பேத்கரின் முழு உருவ சிலை, நந்திவரம், கூடுவாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் அலுவலகம், அங்கன்வாடி மையம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் தற்போது நகராட்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதில், பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதில், நந்திவரம் காலனி பகுதியில் இருந்து ஏரிக்கரை வழியாக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த சாலை வழியாக வந்துதான் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் சைக்கிள், பைக், ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் டயர்களும் அடிக்கடி பஞ்சராகி விடுகின்றன.

மேலும், இரு சக்கர வாகனங்களில் சென்று வருவோர் நிலை தருமாறி கீழே விழுகின்றனர். நடக்கக்கூட முடியாத இந்த சாலையால் மாணவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய்வாய்பட்டோர் என அனைத்து தரப்பு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் நேரில் வந்து மேற்படி சாலையை பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

* பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் கார் மற்றும் வேன் பார்க்கிங் வசதி இல்லை. இதனால், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கும் மேம்படுத்தப்பட்ட நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்திற்கும் இடையே உள்ள பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சவாரிக்கு செல்லும் வாகனங்கள் மணி கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டு வருகின்றன. இதில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நகராட்சி நிர்வாகம் சார்பில் பைக், ஆட்டோ, கார், வேன் என அனைத்து வாகனங்களுக்கும் தனித்தனியாக பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் 10 ஆண்டுகளாக சீரமைக்காததால் குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nandivaram ,Guduvancherry Municipality ,Guduvancheri ,Nandhivaram ,Gootuvancheri ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...