×

நீலமங்கலம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோயில் தீமிதி விழா

செய்யூர்: நீலமங்கலம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிப்பட்டு சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த நீலமங்கலம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில், கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு அக்னி வசந்த விழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு, கோயிலில் தினமும் மகாபாரத சொற்பொழிவுகள் நடந்தன. அதன்பின், கடந்த 1ம் தேதி முதல் தினமும் இரவு மகாபாரத கூத்து நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாான, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், புராண கதைகளில் வரும் அர்ஜூனன், பீமன் மற்றும் துரியோதனன் ஆகிய வேடங்களை அணிந்து வந்த கூத்து கலைஞர்கள் வீதிகளில் கூத்தாடிக் கொண்டே, இதிகாச வரலாற்றை மக்கள் முன் நடித்துக் காட்டினர். இதனைதொடர்ந்து, பீமன் வேடமிட்ட கூத்து கலைஞர், மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் உருவத்தின் மீது ஏறி அமர்ந்து தொடையில் பீமன் அடிப்பது போன்று, தத்துரூபமாக நடித்துக் காட்டினர். அதன்பின் மாலை நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து திரவுபதி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனையடுத்து, இரவு திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post நீலமங்கலம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோயில் தீமிதி விழா appeared first on Dinakaran.

Tags : Tirupatiamman Temple Dimithi Festival ,Neelamangalam Village ,Tirupati Amman temple ,Thirupathiyamman Temple Dimithi Festival ,
× RELATED திருத்தணி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா