×

வடமாநில வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல்: 3 பேர் கைது, இருவருக்கு வலை

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் உள்ள மாதா கோயில் தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த குழுவை சேர்ந்த மொகரம் மண்டல் (40) என்பவர் நேற்று முன்தினம் மாலை கட்டுமானப் பணி நடைபெற்ற இடத்தின் அருகில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த இடத்திற்கு எதிரே ஒரு மறைவான இடத்தில் சிலர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மொகரம் மண்டலை அழைத்து தாங்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே இருந்த புற்களை அகற்றி சுத்தம் செய்து தருமாறு கூறியுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மொகரம் மண்டல் தனது கட்டிடத்திற்கு சென்று விட்டார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், மொகரம் மண்டலை பிடித்து `நாங்கள் சொல்வதை கேட்க மாட்டாயா’ என்று கூறி கிரிக்கெட் மட்டை மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில், தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மொகரம் மண்டலை, அந்த கட்டிடத்தில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மொகரம் மண்டலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை அளித்த தகவலின்பேரில் கேளம்பாக்கம் போலீசார் மருத்துவமனையிலும், சம்பவம் நடைபெற்ற இடத்திலும் விசாரணை மேற்கொண்டனர். இதில், கேளம்பாக்கம் மாதா கோயில் தெருவை சேர்ந்த 5 நபர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார், கேளம்பாக்கம் மாதா கோயில் தெருவை சேர்ந்த வினீத் (21), பிரவீன் (23), விஷ்வா (21) ஆகிய 3 பேரை கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த தீபக், ஹரீஷ் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post வடமாநில வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல்: 3 பேர் கைது, இருவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Murder ,attack ,North State ,Tirupporur ,Matha Koil Street ,Kelambakkam ,Dinakaran ,
× RELATED வடமாநிலத்தில் இருந்து வந்துள்ளவர்கள்...