×

நாட்றம்பள்ளி அருகே டீக்கடையில் தவறவிட்ட சென்னை பெண்ணின் 8.5 சவரனை 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

சென்னை: சென்னை போரூரை அடுத்த கோவிலம்பாக்கம் பூபதி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் பிரபு. இவரது மனைவி வைஷ்ணவி(25). இருவரும் பெங்களூருவில் தங்கி ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து காரில் சென்னைக்கு திரும்பியுனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள டீக்கடையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் டீ குடிக்க சென்றுள்ளனர். தொடர்ந்து அங்குள்ள கழிப்பறைக்கு சென்ற வைஷ்ணவி தனது கையில் இருந்த ஹேண்ட் பேக்கை மறதியாக விட்டு சென்றுள்ளார். அதில் 3 ஜோடி கம்மல், ஒரு செயின் என 8.5 சவரன் நகைகள் மற்றும் விலை உயர்ந்து செல்போன் ஆகியவற்றை வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் அரை மணிநேரம் காரில் பயணித்தபோது, தனது ஹேண்ட்பேக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த வைஷ்ணவி மீண்டும் டீக்கடைக்கு சென்று கழிவறையில் தேடி உள்ளார். ஆனால் ஹேண்ட்பேக் காணவில்லை. இதுகுறித்து உடனடியாக நாட்றம்பள்ளி போலீசில் வைஷ்ணவி புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஓசூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற டிராவல்ஸ் பஸ்சில் வந்த பெண் ஒருவர் ஹேண்ட்பேக்கை எடுத்துச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த டிராவல்ஸ் பஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு அதில் வந்தவர்களின் விவரங்களை சேகரித்து விசாரித்தனர். இதில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த பெண் ஹேண்ட்பேக்கை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அந்த பெண்ணின் வீட்டிற்கு போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது அந்த பெண் ஹேண்ட்பேக்கை ஒப்படைத்துவிட்டார். மேலும் அதிலிருந்த நகைகள், செல்போன் அப்படியே இருந்தது.தொடர்ந்து நகைகளுடன் ஹேண்ட்பேக்கை மீட்ட போலீசார் நேற்று மாலை 5 மணியளவில் அதன் உரிமையாளரான வைஷ்ணவியிடம் ஒப்படைத்தனர். தவறவிட்ட நகைகளை 24 மணி நேரத்தில் மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

The post நாட்றம்பள்ளி அருகே டீக்கடையில் தவறவிட்ட சென்னை பெண்ணின் 8.5 சவரனை 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார் appeared first on Dinakaran.

Tags : Nadrampalli ,CHENNAI ,Vignesh Prabhu ,Kovilambakkam Bhupathi Nagar ,Porur ,Vaishnavi ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக...