×

அரசியல் லாபத்துக்காக பாஜ கவுன்சிலர் பொய் புகார்

கோவில்பட்டி, ஜூன் 13: சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் பாஜ கவுன்சிலர் பொய் புகார் அளித்ததாக கோவில்பட்டி நகராட்சி சேர்மன் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் வருவாய் ஆய்வாளர் அலுவலக புதிய கட்டிடத்தை கடந்த 10ம் தேதி கனிமொழி எம்பி திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனும் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த நகராட்சி 20வது வார்டு உறுப்பினர் பாஜவை சேர்ந்த விஜயகுமார், கனிமொழி எம்பியிடம் மனு வழங்கினார். இதுதொடர்பாக கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, நிருபர்களிடம் கூறியதாவது: கோவில்பட்டி நகராட்சியில் வார்டு எண் 20, 22க்குட்பட்ட பகுதிகளில் கடந்த அதிமுக ஆட்சியில் 2வது குடிநீர் குழாய் பதிக்காமல் விட்டு விட்டனர். ஆனாலும் அந்த வார்டுகளில் பழைய குழாய்களின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பகுதியில் உள்ள 8 வீடுகளுக்கு மட்டும் குடிநீர் வராமல் இருப்பதாக புகார் வந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த 8 வீட்டு உரிமையாளர்களும் நகராட்சிக்கு குடிநீர் பராமரிப்பு கட்டணம் ₹500 இதுநாள் வரை செலுத்தாமல் இருப்பதாக தெரிய வந்தது. ஆனாலும் குடிநீர் அத்தியாவசியம் என்பதால் நகராட்சி மூலம் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லாரி மூலமும் குடிநீர் வழங்கி வருகிறோம். அரசிடம் சிறப்பு நிதி வழங்க கோரியுள்ளோம்.இந்நிலையில் 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தனக்கு சுய விளம்பரம் தேடுவதற்கும், அரசியல் லாபத்துக்காவும், நான்கரை ஆண்டுகளாக வார்டு முழுவதும் குடிநீர் வரவில்லை என எம்பியிடம் புகார் தெரிவித்து அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்பட்டார். இதுவே உண்மை நிலை என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். பேட்டியின் போது மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலிபிரகாஷ், இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், வார்டு உறுப்பினர்கள் கனகராஜ், சண்முகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post அரசியல் லாபத்துக்காக பாஜ கவுன்சிலர் பொய் புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Kovilpatti ,Kovilpatti Municipality ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!