×

சிசிடிவிக்கு ‘பிளையிங் கிஸ்’ ஹெல்மெட் திருடன் ‘ரொமான்ஸ்’

கோழிக்கோடு ஆனவாதில் என்ற பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. அங்கு நேற்று முன்தினம் காலையில் திருட்டு நடைபெற்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஹெல்மெட் மற்றும் ரெயின்கோட் அணிந்து வந்த நபர், மருத்துவமனை ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், பின்னர் உள்ளே இருந்த மேஜையை உடைத்து அதில் இருந்து ரூ.20 ஆயிரத்தை திருடுவதும் பதிவாகியுள்ளது.
மருத்துவமனை சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து கொண்டிருந்த நிலையில் ஷட்டர் உடைக்கும் சத்தம் வெளியே கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

காலையில் உரிமையாளர் மருத்துவமனையை திறக்க வந்த போது தான் திருட்டு நடைபெற்றது தெரியவந்தது. பின்னர் சிசிவிடி காட்சிகளை பரிசோதித்த போது, கொள்ளையன் பணத்தை திருடி விட்டு சிசிடிவி கேமராவுக்கு ஒரு பிளையிங் கிஸ் கொடுத்து விட்டு வெளியே வந்து பைக்கில் தப்பி செல்வது பதிவாகி இருந்தது. ஹெல்மெட், ரெயின்கோட் அணிந்திருந்ததால் தன்னை யாரும் பிடிக்க முடியாது என்ற எண்ணத்துடன் திருடன் கேமராவுக்கு பிளையிங் கிஸ் கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கோழிக்கோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* துணிக்கடையை அலறவிட்ட கார் ஆசாமிகள் ஒன்னா வந்து சுருட்டுனாங்க… தனித்தனியா எஸ்கேப்பானாங்க…
காரைக்கால் நகர் பாரதியார் வீதியில் பிரபல ரெடிமேட் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இரவு 8 மணியளவில் அந்த பகுதி மக்கள் நடமாட்டத்துடன் மிகவும் பரபரப்பாக இருந்தது. அப்போது சாம்பல் நிற கார் ஒன்று திடீரென கடை முன் நிற்கிறது. அதிலிருந்து இறங்கிய 3 பேர், கடைக்குள் சென்றனர். பின்னர் அவர்களுக்கு பிடித்தது போல் ஆடைகளை வாங்கினர். அப்போது கடை ஊழியர்கள் பில் போடுவதற்குள், 3 பேரில் ஒரு நபர் ஆடை இருந்த பையை எடுத்துக்கொண்டு நைசாக வெளியே வந்தார். அங்கு தயார் நிலையில் இருந்த காரில் வந்து ஏற கார் மின்னல் வேகத்தில் புறப்பட்டு செல்கிறது. இதில் மற்றொரு நபரும் நைசாக வெளியேறி செல்கிறார். இதனால் உஷாரான கடை ஊழியர்கள், மற்றொரு நபரை உள்ளே வைத்து ஷட்டரை மூட முயற்சித்தனர். அந்த நபர், திமிறியவாறு ஊழியர்களை தள்ளி விட்டு வெளியே வந்து அதிவேமாக ஓடுகிறார். இதனைத்தொடர்ந்து கடை ஊழியர்களும், வெளியே ஓடி வந்த அந்த நபரை விரட்டி பிடிக்க முயன்றும் முடியவில்லை. கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

The post சிசிடிவிக்கு ‘பிளையிங் கிஸ்’ ஹெல்மெட் திருடன் ‘ரொமான்ஸ்’ appeared first on Dinakaran.

Tags : Anavadi ,Kozikode ,
× RELATED பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த...