×

செம்மர கடத்தல், ஆள் கடத்தல், கொலை முயற்சி என 50 வழக்குகள்; ரியல் புஷ்பாவாக செயல்பட்ட மிளகாய்பொடி வெங்கடேசன் யார்? பரபரப்பு தகவல்கள்

* அரசியல், பணம், ரவுடிகள் பலத்தால் டானாக விளங்கியவர் சிக்கியது எப்படி

சென்னை: அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தின் உண்மையான கதைக்குச் சொந்தக்காரரான மிளகாய் பொடி வெங்கடேசன் சென்னையில் துப்பாக்கி முனையில் தொழில் அதிபர்களை மிரட்டியதாக கைது செய்யப்பட்டார். இது பாஜகவிலும், ரவுடிகள் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செம்மரக்கட்டை கடத்தல் மூலம் பல ஆயிரம் கோடி சம்பாதித்தவர் மிளகாய்பொடி வெங்கடேசன் (49). இவரும், திருவள்ளூர் மாவட்டம் அதிமுக இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளராக உள்ள சீனிவாசன் ஆகிய 2 பேரும் சேர்ந்து தொழிலதிபர் கண்ணன் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ரெட்ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். வெங்கடேசன், அரசியல், பணம், ரவுடிகள் என அனைத்து தரப்பிலும் செல்வாக்காக விளங்குகிறவர்.

இதனால் போலீசுக்கு சென்றால்தான் தனது உயிருக்கு பாதுகாப்பு என்று கருதி ஆவடி போலீஸ் கமிஷனர் அருணிடம் தொழிலதிபர் கண்ணன் புகார் செய்தார். வெங்கடேசன் குறித்து விசாரித்தபோது, அவர் ஏற்கனவே நிலமோசடியில் ஈடுபட்டதாக ஆவடி மத்தியக் குற்றப்பிரிவு போலீசிலும் புகார் இருப்பது தெரியவந்தது. இதனால் கே.ஆர்.வெங்கடேசன்(எ)மிளகாய் பொடி வெங்கடேசனை கைது செய்ய ரகசிய திட்டம் வகுக்கப்பட்டது. வெங்கடேசனுக்கு அரசியல் மட்டுமல்லாது போலீசார் மட்டத்திலும் செல்வாக்கு உண்டு. தன் பகுதிக்கு எந்த போலீஸ் அதிகாரி வந்தாலும் அவர்களுக்கு வாழ்த்து சொல்வது, தனது வீட்டுக்கு அழைத்து வந்து விருந்து வைப்பது என்று சகல வகைகளிலும் தனது செல்வாக்கை காட்டி வந்தார். இதுவரை அப்படித்தான் அந்தப் பகுதியில் இருந்து வந்தார்.

தற்போது ஆவடிக்கு புதிய போலீஸ் கமிஷனராக அருண், இணை கமிஷனராக விஜயகுமார், துணை கமிஷனராக பாலகிருஷ்ணன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்னர் வந்துள்ளனர். இவர்கள் எல்லோருமே புதிய அதிகாரிகள் என்பதோடு நேர்மையான அதிகாரிகள் என்பதால் அவர்களை நெருங்க முடியாமல் தவித்து வந்துள்ளார். கீழ் மட்ட போலீசில் வெங்கடேசனுக்கு ஆதரவு இருக்கும் என்பதால் அவர் மீதான புகார் ரகசியமாக வைக்கப்பட்டது. அவரை கைது செய்ய இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்ய திட்டமிட்டனர். இந்த கைது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. பெரிய அளவில் வாகன சோதனை மற்றும் கைது செய்ய வேண்டியது வரும் என்று கூறி 100க்கும் மேற்பட்ட போலீசார் தயாராக வைக்கப்பட்டிருந்தனர்.

அதேநேரத்தில் தனிப்படையினர் அவரது நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர். ஆனால் ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்குள் போலீசார் பெரிய அளவில் கூடுகின்றனர். இதனால், ஏதோ பெரிய சம்பவம் நடக்கப்போவதாக வெங்கடேசனுக்கு முன் கூட்டியே தெரிந்துவிட்டது. ஆனால் தன்னைத்தான் கைது செய்யப்போகிறார்கள் என்பது அவருக்கு தெரியவில்லை. இதனால் வெளியில் பல இடங்களுக்கும் சென்று சுற்றி விட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். 1 மணிக்கு அவரது வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். பெரிய போலீஸ் பட்டாளமே வந்தது தெரிந்ததும், வெங்கடேசன் அதிர்ந்து விட்டார்.

பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வந்த இந்த வீட்டைச் சுற்றி போலீசாரா என்று கருதி பல உயர் அதிகாரிகளுக்கு போன் செய்து என்ன நடக்கிறது என்று விசாரித்துள்ளார். தன்னை காப்பாற்றும்படியும் கேட்டுள்ளார். ஆனால் நள்ளிரவு என்பதால் ஒரு சில அதிகாரிகள் போனை எடுத்து விட்டு அருண் சாரிடம் பேச முடியாது என்று கூறிவிட்டனர். ஒரு சிலர் நாளை விசாரிக்கிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டனர். இந்தநிலையில் போலீசார் கதவை தட்டத் தொடங்கிவிட்டனர். இதனால், கதவை திறந்த வெங்கடேசனிடம் போலீசார் உங்களை கைது செய்கிறோம் என்றதும் வியர்த்து விட்டது. சரி வருகிறேன் என்று புறப்பட்டு வந்தார். அவரை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போதுதான் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

வெங்கடேசனின் தந்தை பர்மாவில் வசித்து வந்தார். ஒரே பையனான வெங்கடேசனுடன் பெற்றோர் சென்னைக்கு வந்தனர். ஆரம்பத்தில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வெங்கடேசனின் பெற்றோர் தவித்தனர். இதனால் ரெட்ஹில்ஸ் பகுதியில் 13 ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். அப்போது வெங்கடேசனுக்கு மேல் சட்டையோ, படுக்க பாயோ கிடையாது. வெங்கடேசனின் அம்மா, மிளகாய்பொடி வியாபாரம் செய்து வந்தார். இதுதான் வெங்கடேசனுக்கு மிளகாய் பொடி வெங்கடேஷ் என்று அடைமொழி பெயராக மாறியது. 1994ல் தொழிலாளியாக சவுதிக்கு சென்றார். அங்கு ஆடு மற்றும் ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். 3 மாதம் வேலை செய்தார்.

அப்போது, வெங்கடேசனின் தாயார் சென்னையில் உயிரிழந்தார். இந்த தகவல் தாமதமாகத்தான் அவருக்கு தெரிந்தது. அதன்பின்னர் சென்னை திரும்பியவருக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பர்மா காலனி நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. சென்னையில் ஆரம்பத்தில் ஒரு சில அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர், திடீரென ஒரு நாள் பெரிய ஆளாக வளர்ந்து நின்றார். அதற்கு காரணம், பர்மாவில் இருந்து வந்ததால், அங்கு உள்ள செம்மரக்கட்டை கடத்தல் ஆசாமிகளுடன் தொடர்பு ஏற்படுத்தினார். பின்னர் மணிப்பூரில் இருந்து 100 பேரை வரவழைத்து ஆந்திராவில் திருப்பதி பகுதியில் செம்மரக்கட்டைகளை வெட்டி, வெளிநாடுகளுக்கு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதில் பல கோடி ரூபாய் பணம் வருமானமாக கொட்டியதாகவும் கூறப்படுகிறது.

பிரபல கடத்தல் ஆசாமிகள் கெங்குரெட்டி, சாகுல் ஹமீதுவுடன் நட்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் செம்மரக்கட்டை கடத்தலில் கொடி கட்டிப் பறந்தார். ஆனால் கெங்குரெட்டிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் தொடர்பு இருந்ததாக ஆந்திரா போலீசார் கூறி வருகின்றனர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக வந்ததும் செம்மரக்கட்டை கடத்தல் ஆசாமிகளை பிடித்து உள்ளே தள்ளினார். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட கடத்தல் வழக்கில் சிக்கியிருந்த கே.ஆர்.வெங்கடேசனும் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக அவரைப் பிடிக்க போலீசார் சென்னைக்கு வந்தபோது ஆந்திரா போலீசாரை தாக்கி விட்டு தப்பிவிட்டார். அவரை போலீசார் சுட்டுப் பிடிக்க முயன்றனர். துப்பாக்கிச் சூட்டிலும் தப்பி விட்டார். அதன்பின்னர் அவரை ஆந்திரா போலீசார் பொறி வைத்து பிடித்தனர். சந்திரபாபு நாயுடு இருக்கும்வரை வாலை சுருட்டிக் கொண்டு அமைதியாக இருந்த வெங்கசேடன் மீண்டும் தனது கை வரிசையை காட்டி வந்ததாக கூறப்படுகிறது. பெரிய அளவில் வளர்ந்த வெங்கடேசன் ரெட்ஹில்ஸ் பகுதியில் மலைக்க வைக்கும் வகையில் பெரிய சொகுசு பங்களா கட்டினார்.

ஜெயலலிதா போல தனது குளியல் அறையில் தங்கம் பதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வீட்டுக்குள் தியேட்டர், நீச்சல் குளம், பார் என சகல வசதிகளுடன் ஆடம்பரமாக 4 மாடி கொண்ட பங்களாவை கட்டியுள்ளார். இதை வீடியோவாகவும் போட்டுள்ளார். மேலும் அதிமுக, பாஜ கட்சிக்காக பணத்தை வாரி இறைத்தார். இதனால் ஆரம்பத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் அதிமுகவில் ஒன்றிய இளைஞர் அணி செயலாளராக இருந்தவர், பின்னர் திருவள்ளூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணியின் இணை செயலாளர் பதவி கிடைத்தது. பின்னர் பாஜகவில் இணைந்தார்.

இதற்காக கொடுக்க வேண்டியவர்களுக்கு சுமார் ரூ.50 லட்சத்தைக் கொடுத்துள்ளார். அவ்வளவுதான் கட்சியில் சேர்ந்த அன்றே மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் பதவி கிடைத்தது. இந்த அறிக்கை வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வெங்கடேசனைப் பற்றிய தகவல் வெளியானது. உடனே கட்சி பொறுப்பில் இருந்து அறிவித்த 2 மணி நேரத்தில் நீக்கப்பட்டார். ஆனால் அவரது மகனுக்கு மருத்துவ அணியில் மாநில பொறுப்பு வழங்கி கட்சித் தலைமை தனது விசுவாசத்தை வெங்கடேசனுக்கு காட்டியுள்ளது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்பட பல்வேறு தலைவர்கள் வெங்கடேசன் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் இங்கு வந்து விருந்து உண்டு மகிழ்ந்துள்ளனர். விஐபிக்கள் வந்தபோது எல்லாம் அதை தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டு விளம்பரம் தேடி வந்தார் வெங்கடேசன். அதோடு கட்சியில் பல தலைவர்களுக்கும் பணத்தை வாரி இறைத்தார். இதனால் கட்சியில் இருக்கும் பல தலைவர்கள் அண்ணாமலையை விட வெங்கடேசனுக்கே விசுவாசம் காட்டிவந்தனர். அரசியல் மட்டுமல்லாது தமிழகத்தைச் சேர்ந்த பல ரவுடிகளுக்கும் காட்பாதராகவும் வெங்கடேசன் இருந்துள்ளார். இதனால் பலரும் ஒவ்வொரு மாதமும் வந்து மாமூல் வாங்கிச் செல்வார்களாம்.

இதன் காரணமாக இவர் மீது பல கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் சசிகலாவின் சகோதரர் மகன் விவேக், செம்மரக்கட்டை கடத்தல் பிரமுகர் பாஸ்கரின் மகளை திருமணம் செய்தார். அந்த திருமணத்துக்காக பல வேலைகளை வெங்கடேசன்தான் செய்து வந்தார். இதனால்தான் அவரை அதிமுகவில் பொறுப்பில் நியமித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுகவில் இருக்கப் பிடிக்கவில்லை என்று கூறி பாஜகவில் இணைந்தார். மேலும் ஆந்திராவில் உள்ள வழக்கில் இருந்து தப்பிக்க பாஜகவில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

கட்சிக்காக பணத்தை செலவு செய்து வந்தார். இவரை ஆந்திர மக்கள் ‘ரியல் புஷ்பா’ என்று அழைத்து வந்தனர். இவரது வாழ்க்கையைத்தான் அல்லு அர்ஜூன் நடித்து புஷ்பா என்று படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது இந்த ரியல் புஷ்பா, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் ஆந்திரா போலீசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

* மின்ட்டை முந்திய மிளகாய்
பாஜகவில் பல ரவுடிகள் சேர்ந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில்தான் ஆவடி பகுதியில் ஏற்கனவே நெசவாளர் அணி செயலாளராக இருந்த மின்ட் ரமேஷ் கைது செய்யப்பட்டார். தற்போது கே.ஆர்.வி.வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அதில் மின்ட் ரமேஷ், கூட்டத்துக்கு ஆட்களை சேர்ப்பது, ரவுடி தொழில் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். அதற்கு பல மடங்கு மேலாக வெங்கடேஷ் செய்து வந்தார்.

* பள்ளி, பைனாஸ் கம்பெனி
கே.ஆர்.வி. ரியல் எஸ்டேட், கே.ஆர்.வி.கம்பெனி, பைனான்ஸ் உள்பட பல நிறுவனங்களும், 5ம் வகுப்பு வரையான மெட்ரிக்குலேசன் பள்ளியையும் தொடங்கி நடத்தி வந்துள்ளார்.

* ரூ.50 லட்சம் துப்பாக்கி
வெங்கடேசனின் வீட்டில் பெராரி, பிஎம் டபிள்யூ உள்பட 7 கார்கள், ஹார்லி டேவிட்சன் பைக் வீட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு நாளைக்கு ஒரு காரில்தான் வெங்கடேசன் செல்வாராம். அவரிடம் இருந்து 2 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ஒரு துப்பாக்கி பெரட்டா என்ற வகையைச் சேர்ந்தது. இந்த துப்பாக்கியின் ஆரம்ப விலையே ரூ.50 லட்சம் முதல் ஒரு கோடி வரை இருக்கும். இந்த துப்பாக்கியை ரூ.50 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். மற்றொரு துப்பாக்கி, லாமா என்ற வகையைச் சேர்ந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம். இந்த துப்பாக்கியை வைத்துத்தான் கண்ணனை மிரட்டியுள்ளார்.

The post செம்மர கடத்தல், ஆள் கடத்தல், கொலை முயற்சி என 50 வழக்குகள்; ரியல் புஷ்பாவாக செயல்பட்ட மிளகாய்பொடி வெங்கடேசன் யார்? பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Milkaipodi Venkatesan ,Pushpa ,Chennai ,Allu Arjun ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...